இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஜெ.கஜநிதிபாலனால் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி இரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
தொடர்ந்து குறித்த மீனவர்கள் கடந்த 8 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்களை 22 ஆம் திகதிரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்கள் மன்றில் முற்படுத்தப்படாத நிலையில் மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகரி ஒருவர் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
இதன் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் குறித்த மீனவர்களினம் கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக வாக்கு மூலம் பெறவில்லை எனவும் ஆகவே சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறும், அதுவரை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவானிடம் தமது விண்ணப்பத்தை கோரியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த 3 வழக்குகளின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான், மீனவர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.