சென்னையில் வாகனமொன்றில் இருந்து 11 கிலோகிராம் ஆம்பெடமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து மூன்று இலங்கையர்களும் மூன்று இந்திய பிரஜைகளும் இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளின் ஒரு பகுதியை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காகவும், ஒரு பகுதியை இந்தியாவின் பிற மாநிலங்களில் கடத்துவதற்காகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை-கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் டிரக் ஒன்றை சோதனையிட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அதிலிருந்த 11 ஆம்பெடமைன் பாக்கெட்டுகளை கைப்பற்றினர். வாகனத்திலிருந்த இயந்திரம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
வாகன சாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மூன்று இலங்கையர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் அங்கம் வகித்ததுடன், கடந்த ஏழு ஆண்டுகளில் பல மாநிலங்களிலும் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா, மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூரில் உள்ள மோர்ச்சில் பகுதியிலிருந்து இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.