கனடியத் தலைநகரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவதற்கும், தொற்று பரவலை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார விதிமுறைகளிற்கும் எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அணிவகுத்துள்ளன.
இந்த மாத நடுப்பகுதியில் கனடாவும், அமெரிக்காவும் கனரக வாகன ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக்கின.
அதற்கு எதிராக “சுதந்திரமான வாகன அணி” எனும் பெயரில் போராட்டம் தொடங்கியது. பிறகு அது அரசாங்கத்தின் அத்துமீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது.
உலகின் மிக நீளமான எல்லையைக் கடக்கும் வாகனமோட்டிகள் அதனால் பாதிக்கப்பட்டனர்.
கனடிய தலைநகரில் ஒன்றுகூடிய வாகனங்களும், போராட்டக்காரர்களும், நேற்று பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளிற்குள்ளும் நுழைந்தனர். பெருமளவான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் நகரின் மையத்தில் நேற்று நேரிசல் காணப்பட்டது. நகரிற்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொலிசார் அறிவுறுத்தினர்.
பாராளுமன்ற கட்டிடங்களுக்கு முன்னால் வெலிங்டன் தெருவில் கூடியிருந்த பல டிரக்குகள் பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கண்டிக்கும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், கனடாவில் கம்யூனிச ஆட்சி ஏற்படுமென்றும் அவர்கள் எச்சரித்தனர்.
பாதுகாப்புக் கவலைகளுக்கு மத்தியில், ட்ரூடோவும் அவரது குடும்பத்தினரும் அவர்களது வீட்டிலிருந்து நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு அறியப்படாத இடத்திற்கு மாற்றப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.