போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம் மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017இல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் தெரிவித்த புது தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது.
பாலச்சந்திர குமார், “ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை நடந்தபோது நான் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். அவர்கள் பேசியது ஆடியோவாகவும் என்னிடம் உள்ளது. திலீப் குறித்த தகவல்களை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லத் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சின் அடிப்படையில் கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர், நடிகர் திலீப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்த எஃப்.ஐ.ஆரில் திலீப் முதல் குற்றவாளியாகவும், அவரின் சகோதரர் அனூப் என்பவர் இரண்டாம் குற்றவாளியாகவும், திலீப் மைத்துனர் (காவ்யா மாதவன் சகோதரர்) சூரஜ் என்பவர் மூன்றாம் குற்றவாளியாகவும், அதுபோக மேலும் மூவரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். எஃப்.ஐ.ஆரை அடுத்து திலீப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால் கைதில் இருந்து தப்பித்தார்.
ஜனவரி 19 அன்று, புதிய வழக்கை விசாரிக்கும் கேரள குற்றப்பிரிவு காவல்துறை, திலீப்பின் முன்ஜாமீனை கடுமையாக எதிர்த்து நீதிமன்றத்தில் 68 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. கூடவே, திலீப்பை விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் விசாரணை, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, நீதிபதி கோபிநாத் திலீப் தரப்பை கடுமையாக எச்சரித்தார்.
நீதிபதி கோபிநாத் திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளையிடம், “விசாரணையின் போக்கில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் இந்த நீதிமன்றத்தால் மிகவும் தீவிரமாகப் பார்க்கப்படும். விசாரணையை சீர்குலைக்கும் எந்த முயற்சியும் குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீனை ரத்து செய்ய வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் கட்சிக்காரரிடம் இதை எடுத்துச் சொல்லுங்கள். நான் மிகவும் கண்டிப்பானவன். இந்த வழக்கின் கட்டுப்பாடுகளை உங்கள் தரப்பு இனி மீற நினைத்தால் நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும். தேவையற்ற எதையும் செய்ய முயற்சிக்க வேண்டாம். அப்படி முயற்சிக்க யோசிக்ககூட செய்யாதீர்கள்.
விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டது தொடர்பாக அரசு தரப்பு சீலிடப்பட்ட கவரில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆவணங்கள் திலீப்பிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. அரசு தரப்பு வழங்கிய ஆதாரங்களை வெளியிட நீதிமன்றம் தயாராக இல்லை. திலீப் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவற்றை விசாரிக்க அரசுக்கு உரிமை உண்டு. திலீப் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் விசாரணை சரியான முறையில் நடக்காது என சொல்லப்படுவது கவலை அளிக்கிறது.
எனவே, அதிகாரிகளை கொல்ல சதி செய்ததாகக் கூறப்படுவது தொடர்பாக நடிகர் திலீப் உள்ளிட்ட ஐந்து பேரை மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஜனவரி 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திலீப் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
அதேபோல், ஜனவரி 27 ஆம் திபதி வரை திலீப்பைக் கைது செய்ய இந்த நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது” என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.