விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பொது தொலைக்காட்சி விவாதத்திற்கு விடுத்த சவாலை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (21) பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கும் போதே அளுத்கமகே இந்த அழைப்பை விடுத்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தொடர்ந்தும் உரையாற்றும் போதே அது தொடர்பான விவாதத்திற்கு அழைக்கவுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
“ஈஸ்டர் தாக்குதல் பற்றிய எங்கள் சாட்சியத்தை நாங்கள் கொண்டு வருவோம். நீங்கள் உங்கள் சொந்த ஆதாரத்தை கொண்டு வாருங்கள். விவாதம் செய்யலாம்.” அமைச்சர் தெரிவித்தார்.
தாம் அதற்குத் தயாராக இருப்பதாகவும் சர்ச்சைகளுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் ஹரீன் பெர்னாண்டோ கூறினார்.




