பொரளை தேவாலயம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைப்பதற்காக ஓய்வுபெற்ற வைத்திய அத்தியட்சகருக்கு வெடிகுண்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஹம்பாந்தோட்டை ரன்ன பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்திய அத்தியட்சகரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இன்று (20) ரன்ன பிரதேசத்திற்குச் சென்ற விசேட பொலிஸ் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
எம்பிலிப்பிட்டிய, பனாமுரவில் அமைந்துள்ள வைத்தியரின் தனியார் வைத்திய நிலையத்தில் சுமார் 8 வருடங்களாக பாதுகாவலராக கடமையாற்றி வந்த லியனகே தயாசேன, பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த ஓய்வு பெற்ற மருத்துவரின் ஆலோசனையயில் வெடிகுண்டு பொருத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த வைத்தியரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தமக்கு வெடிகுண்டு வழங்கிய நபரின் விபரங்களை வைத்தியர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவருக்கு கீழ் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய லியனகே தயாசேன என்ற நபரின் ஊடாக ரன்ன பிரதேசத்தில் ருவன் அடையாளம் காணப்பட்டதாகவும் வெடிகுண்டுகள் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
ரன்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு வெடிகுண்டுகளை கையளிப்பதற்காக சந்தேகத்திற்குரிய வைத்தியர் அவ்வப்போது பணத்தை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான வைத்தியரின் மனைவி, கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.அதிகாரி தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை, ரன்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கே.ஆர்.பிரேமச்சந்திர என்றழைக்கப்படும் ருவன் துறைமுக அதிகாரசபையின் ஊழியர் எனவும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
55 வயதான சந்தேக நபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



