இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏன் நிராகரித்தேன் என்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதுக்காரணமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
இதனை இந்திய தூதரிடம் சம்பந்தன் தெரிவித்த போது, முகத்திலறைந்தால் போல, அந்த கருத்தை இந்திய தூதர் நிராகரித்தார்.
13வது திருத்தத்தை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் தயாரித்த ஆவணத்தை இந்திய தூதரிடம் கைளித்த போது, இந்த சம்பவம் நடந்தது.
நேற்று முன்தினம் (18) தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள இந்திய தூதரிடம் ஆவணத்தை கையளித்தனர்.
இந்த சந்திப்பின் போது, இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்த போது,-
”இந்திய பிரதமர் மோடியை சந்திக்க எங்களிற்கு அழைப்பு விடுத்தீர்கள். நாங்கள் அதை தவிர்த்தமைக்கு முக்கிய காரணமொன்றுள்ளது. அந்த சமயத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்தியாவில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் நாங்கள் இந்தியாவிற்கு வந்து, எமக்கு நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதில் சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் நாங்கள் சந்திப்பை தவிர்க்க முடிவெடுத்தோம்’ என தெரிவித்தார்.
இதை கேட்ட இந்திய தூதர், ‘அப்படியல்ல. நீங்கள் வருவதில் எமக்கு எந்த சங்கடமும் ஏற்பட்டிக்காது. பசில் ராஜபக்சவையும் இந்தியாதான் அழைத்தது. உங்களையும் இந்தியாதான்’ என இந்திய தூதர் தெரிவித்தார்.
நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்த போது, தனது மகளின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது என தெரிவித்து இரா.சம்பந்தன் சந்திப்பை ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.