சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலர் குழுக்களாக இணைந்து அடாவடிகள் மற்றும் வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பில் பல தரப்பினரும் கவனம் எடுத்த நிலையிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த வாரமும் மாணவர்கள் அடிதடி போன்ற வன்முறையில் ஈடுபட்டதால் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் மீது பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடுத்தனர். குறித்த வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது இதன் போது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
பாடசாலை நாட்களில் கல்வியில் கவனம் செலுத்தும் படியும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தும்படியும் மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் நீதிமன்ற தண்டனைகளை பெறவேண்டிவரும் எனவும் நீதவான் எச்சரித்ததுடன் பெற்றோர் முன்னிலையில் அறிவுரைகளையும் கூறியிருந்ததுடன் மூவரையும் தலா 75 000 பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.




