இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
முன்னறிவிப்பு இன்றி பல நீண்ட தூர புகையிரத பயணங்களை ரத்து செய்யும் இலங்கை புகையிரத திணைக்கள நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு கோரிக்கைகளை ிலைய பொறுப்பதிகாரிகள் ஏற்க மாட்டார்கள் என்று நேற்று அறிவித்தது.
புகையிரத பயணங்களை ரத்து செய்யும் முடிவால் பொதுமக்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கொழும்பில் இருந்து பெலியத்த, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு நீண்ட தூர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் நிர்வாகம் அறிவித்து பயணச்சீட்டுகளை வழங்கியதாகவும், ஆனால் நேற்றைய தினம் புகையிரத பயணங்களை ரத்து செய்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள புகையிரதங்களுக்கான பயணச்சீட்டுகளை பெருமளவிலான நபர்கள் ஏற்கனவே கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த போராட்டத்தால் 200 புகையிர சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, 80 அலுவலக புகையிர சேவை இடம்பெறுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.