தன் மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் ஆதரவாக குரல் கொடுப்பவர்களிற்கு, நடிகை பாவனா நன்றி தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இது குறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘வெயில்’ படம் மூலம் அறிமுகமான நடிகை பாவனா,அடுத்ததாக தீபாவளி, ஆர்யா, ராமேஸ்வரம் என அடுத்து அடுத்து தமிழில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான ’கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்’ என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
மலையாள படங்களில் கொடி கட்டி பறந்த நடிகை பாவனா, முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
இந்நிலையில் கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்பு முடித்து விட்டு நடிகை பாவனா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை கடத்தியதாகவும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தாலும் இந்த வழக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் தாக்குதல் வழக்கு குறித்து நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மனம் திறந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், இது எளிதான பயணம் அல்ல, ஐந்து வருடங்களாக என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலில் எனது பெயர் மற்றும் அடையாளம் நசுக்கப்பட்டு விட்டன.
குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்த, அமைதியான முறையில் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அதே சமயம் என் குரலை உயிர்ப்பிக்க சிலர் முன்வந்தனர். எனக்காக ஒலிக்கும் குரலை நான் கேட்கும் போது இந்த யுத்தத்தில் ’நான் தனியாள் இல்லை’ என்பதை உணர்ந்தேன். எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி’ என நடிகை பாவனா பதிவு செய்துள்ளார்.
நீண்டகாலமாக நடந்து வரும் இந்த வழக்கில், கடந்த சில தினங்களாக அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டு, நடிகர் திலீப் மீதான பிடி இறுதி வரும் நிலையில், பாவனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.