நாவலப்பிட்டி, போகில் தோட்டத்தின் 100 ஏக்கர் காணியை தனி நபர் ஒருவருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தோட்ட மக்களால் நேற்று (23) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நூறு ஏக்கர் நிலமானது, தனக்கு சொந்தமானது என கோரி, 12 வருடகாலமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நபருக்கே இந்த 100 ஏக்கர் சொந்தமென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து அதிகாரிகள் நேற்று தோட்டத்திற்கு வருகை தந்து குறித்த நபருக்கு இடத்தினை வழங்குவதற்கு வந்துள்ளனர்.
எனினும், மூன்று தலைமுறை காலமாக இந்த தோட்டத்தில் வாழ்ந்து வருவதாகவும், இந்த இடத்தை குறித்த நபருக்கு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் எதிர்காலத்தில் தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றதுடன், நீதிமன்றத்திலிருந்து வருகை தந்தவர்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதிகாரிகள் இந்த காணி தொடர்பான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்திற்கு வழங்குவதாக தெரிவித்ததையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
–க.கிஷாந்தன்-