தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் முடிவில் இன்றும் ஆவணத்தில் கையெழுத்திடப்படவில்லை. சற்று முன்னர் கலந்துரையாடல் முடிந்தது.
தற்போது, புதிய ஆவணமொன்றை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த ஆவணத்தில், அடுத்த ஓரிரு நாளில் கையெழுத்திடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலிறுத்துவதுடன், இடைக்கால ஏற்பாடாக -உடனடியாக, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வலியுறுத்தி, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்களிடம் ஆவணமொன்றை கையளிக்க, தமிழ் கட்சிகள் முயன்று வருகின்றன.
ரெலோ அமைப்பு இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளதால், பெரியளவிலான ஈகோ சிக்கலில் இலங்கை தமிழ் அரசு கட்சி சிக்கியுள்ளது. இதுவரை பெரிய கட்சியாக இருந்த தாம், பிற கட்சி தயாரிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட கூடாதென அதன் தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதனால் சில வாரங்களாக இழுபறி நீடித்த நிலையில், இன்று தமிழ் கட்சிகள் ஒன்றுகூடின.
ஏற்கனவே, ரெலோ ஒரு ஆவணத்தை தயாரித்துள்ள நிலையில், அதை ஏற்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தது. இதன்படி, 5 பக்க ஆவணமொன்றை இன்று கூட்டத்தில் கையளித்திருந்தது. இந்த ஆவணத்தில் வரலாற்று தவறுகள், விடுபடல்கள் காணப்பட்டன. குறிப்பாக, இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தில் தமிழர் தரப்பின் சார்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியும், தமிழர் விடுதலை கூட்டணியும் மாத்திரமே செயற்பட்டது என்ற கருத்துப்பட ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது.
இன்றைய கூட்டத்தில் அதனை ஏனைய தரப்பினர் நேரடியாக சுட்டிக்காட்டியுமிருந்தனர். இலங்கையில் ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது தெரியுமா என இரா.சம்பந்தனிடம் ஏனைய தரப்பினர் கேள்வியெழுப்பிய போது, பதில் கூறாமல் அமர்ந்திருந்தார்.
இன்று கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.
இறுதியில் ரெலோ தயாரித்த ஆவணத்தையும், தமிழ் அரசு கட்சி தயாரித்த ஆவணத்தையும் வைத்துக் கொண்டு, புதிய ஆவணமொன்றை தயாரிப்பதென முடிவாகியுள்ளது.
இதையடுத்து, கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனையவர்கள் சென்று விட்டனர்.
என்.சிறிகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தப்போது புதிய வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரைபை படித்து பார்த்த பின்னர், கையெழுத்திடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாளை அல்லது நாளை மறுநாள் கையெழுத்துக்கள் இறுதி செய்யப்படும். இரா.சம்பந்தன் கையெழுத்திடா விட்டால், அவரை தவிர்த்து, மற்றையவர்களின் கையெழுத்துடன் அனுப்பப்படும்.