மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வு இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற போது, சபை உறுப்பினர்கள் சிலர் தெருச்சண்டியர்கள் போல செயற்பட்டு, மோதலில் ஈடுபட்டனர். இதில், இரு உறுப்பினர்கள் காயமடைந்துள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை (20) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இதன் போது மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம் முஜாஹீரா? அல்லது உப தவிசாளராக இருந்த முஹமட் இஸ்ஸதீன்? என்ற பாரிய இழுபறி நிலைமை சபை உறுப்பினர்களுக்கு இடையில் காணப்பட்டது.
இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கலவரமாக மாறிய நிலையில் பிரதேச சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா , இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு,மேசையில் இருந்த ஒலிவாங்கியை தூக்கி தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதன் மீது தாக்கி, கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். பாலச்சந்திரனை ‘பொம்பிள பொறுக்கி’ என்றும் திட்டினார்.
பதிலுக்கு பாலச்சந்திரனும் தாக்கினார். ‘உன்னட்ட வந்தனானோ?’ என்றும் கேட்டார்.
பெரிய லிஸ்றே தருவேன் என ஆசிரியை சொன்னார்.
இருவரையும் சபையில் இருந்தவர்கள் பிடித்து சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் தற்போதைய தலைவர் சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 42ஆம் மற்றும் 43 ஆம் சபை அமர்வுகளில் சபையின் தவிசாளர் யார் என்ற சந்தேகம் எழுந்ததால் அமர்வுகளில் இருந்து எதிர் தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வின் போது இன்றைய தினம் ஏற்பட்ட தர்க்க நிலையில் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா மற்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர் காமநாதனுமன் ஆகியோர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.