இலங்கை வந்தது பிரியந்தவின் உடல் எச்சங்கள்: 16 வயது சிறுவனிற்கும் விளக்கமறியல்!

Date:

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கடந்த வாரம் கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கை தொழிற்சாலை மேலாளர் பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை மத நிந்தனை குற்றச்சாட்டில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களால்  தொழிற்சாலையின் மேலாளராக இருந்த பிரியந்த குமார அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார்.

இன்று பிரியந்தவின் உடல் நோயாளர் காவு வண்டியில் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது, அங்கு பஞ்சாப் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் ஆலம் அகஸ்டின் அதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அரசு மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.

சமய நல்லிணக்கம் தொடர்பான பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி, இலங்கையின் கெளரவத் தூதுவர் யாசின் ஜோயா மற்றும் பஞ்சாப் உள்துறை மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்ரபி, நாட்டில் இருந்து தீவிரவாதத்தை ஒழித்தது போல், அடிப்படைவாதத்தை ஒழிக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

இன்றைய தினம் துக்க நாளாகும். ஆனால் பிரியந்த குமார கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

49 வயதான குமார கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஏழு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பஞ்சாப் காவல்துறை திங்களன்று அறிவித்தது. இதுவரை கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 131 ஆக உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். சந்தேக நபர்களில் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் கூறப்படும் நபர்களும், வன்முறையை முன்னெடுத்து மற்றவர்களைத் தூண்டியவர்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட 131 பேரில் 26 பேர் இந்த கொடூரமான கொலையில் “மைய பங்கு” வகித்ததாக காவல்துறை மேலும் கூறியது.

பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் மற்றும் பஞ்சாபுக்கான காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோர் விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வழக்கு விசாரணைக்கு செயலாளர் வழக்குரைஞர் பணிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக பஞ்சாப் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 26 பேர் குஜ்ரன்வாலாவில் உள்ள சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால்  15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேக நபர்களை நீதிபதி நடாஷா நசீம் சிப்ரா முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார், விசாரணை நோக்கங்களுக்காக அவர்களை 15 நாள் உடல் காவலில் வைக்குமாறு கோரினர்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 16 வயது சிறுவன் உட்பட 26 சந்தேக நபர்களை 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்களை மீண்டும் டிசம்பர் 21ம் திகதி ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் சியால்கோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதலமைச்சர் புஸ்தார் வெளியிட்ட அறிக்கையொன்றில்-

“இலங்கை குடிமகன் பிரியந்த குமாரவின் படுகொலைக்காக இலங்கை அரசாங்கம், தேசம் மற்றும் பிரிந்த குடும்பத்தின் துயரத்தில் நாங்கள் சமமாக பங்கு கொள்கிறோம்.”

பிரியந்தவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், இந்த விவகாரத்தில் அரசு தனது அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றி வருவதாக உறுதியளித்தார். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விசாரணையின் விவரங்களை அளித்த புஸ்தர், இந்த வழக்கில் நீதிக்கான அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

“விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நானே மதிப்பாய்வு செய்கிறேன். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று முதல்வர் கூறினார்.

பாகிஸ்தான்-இலங்கை உறவுகளை பாதிக்காது

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, பிரியந்தவின் கொலை விடயத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பதில் நடவடிக்கை குறித்து திருப்தி தெரிவித்ததுடன், இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதிக்காது என்றும் கூறினார்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய தூதுவர், கொலைக்கு கண்டனம் தெரிவித்தார், இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். ஆனால், “இந்தச் சம்பவம் நமது நாட்டையோ, நமது மதத்தையோ அல்லது நமது இனத்தையோ குறிவைத்து நடத்தப்படவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்” என்று மேலும் கூறினார்.

ஏற்கனவே பெருமளவிலான சந்தேக நபர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஜேவிக்ரம குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தினால் இரு நாடுகளுக்குமிடையிலான எமது உறவுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும், பாகிஸ்தான் – இலங்கை உறவுகள் சுதந்திரம் அடைந்த காலம் வரை சென்றிருந்ததையும், பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு உதவியாக இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

பிரியந்தவின் குடும்பத்திற்கு எப்படி இழப்பீடு வழங்குவது என்பது குறித்து பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். “இந்த சம்பவத்தை பாகிஸ்தான் அரசு நீதி வழங்கும் வகையில் கையாளும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அன்றைய தினம், உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட், இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் விஜேவிக்ரமவைச் சந்தித்து, கொடூரமான கொலைக்கு இரங்கல் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்