Pagetamil
இந்தியா

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். அவருக்குவ் வயது 88. உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (4) காலை அவரின் உயிர் பிரிந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ரோசய்யா கடந்த 2009ம் ஆண்டு அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை மட்டுமே அவர் அப்பதவியில் நீடித்தார். அதற்குள் ஆந்திர மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுக்க அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆந்திர அரசியலில் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தவர் ரோசையா. 1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்தவர். 16 முறை ஆந்திர மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். பலம் வாய்ந்த ரோசய்யா உட்கட்சிப் பூசலால் பதவியை துறந்தபோது அவர் கடும் அதிருப்தியில் ஆழ்ந்தார்.

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அவரை தமிழக ஆளுநராக நியமித்தது. அப்போது அரசியல் வட்டாரத்தில் சமாதான முயற்சியாக ரோசய்யாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

2011ல் தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில், 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்ததால் தமிழக ஆளுநர் ரோசய்யா மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மாற்றப்படவில்லை. பதவிக்காலம் முழுவதும் நீடித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரோசய்யா தான் தமிழக ஆளுநராக இருந்தார். அவர், அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் நலம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2016 செப்டம்பர் 30 ஆம் தேதி அவரது பதவிக்காலம் முடிந்தது. அவர் விடைபெற்றுச் சென்றார். அவரைத் தொடர்ந்து வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார்.

ஆளுநர் பதவிக்காலம் முடிந்து ஒய்வு பெற்ற பின்னர் ரோசய்யா தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!