நபிகளை இழிவுபடுத்தியதாக குறிப்பிட்டு இலங்கையரை அடித்துக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 145 பேரை பாகிஸ்தான் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பலரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையின் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையரான பிரியந்த குமார என்பவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த வெறிச்செயலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஈடுபட்டனர்.
இந்த கொடூரமான கொலைக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து பரவலான கண்டனங்கள் எழுந்தன.
வசிராபாத் வீதியில் அமைந்துள்ள ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மேலாளர் பிரியந்த குமாரவே கொல்லப்பட்டார். அவர் கிறிஸ்தவர்.
தொழிற்சாலையில் தெஹ்ரீக்-இ-லப் அமைப்பின் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது. அதனை அவர் அகற்றி குப்பைத் தொட்டிக்குள் அவர் வீசியதாகவும், நீண்ட காலமாக தொழிற்சாலையை மதச்சார்பற்ற இடமாக பேண அவர் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று காலையில் தொழிற்சாலையின் வளாகத்தில் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும், உகோகி காவல்நிலையத்தை சேர்ந்த மூன்று பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் மதவெறிக் கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பொலிசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், மாவட்ட காவல்துறை தலைவரை கையடக்கத் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை என்றார்.
மத வெறியர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக வசிராபாத் வீதியின் போக்குவரத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழிற்சாலை ஊழியர்களும் மற்றும் ஏராளமான உள்ளூர் மக்களும் இதில் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் சுமார் 50 பேரளவிலான கும்பலே போராட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் படிப்படியாக கும்பல் அதிகரித்தது. அவர்கள் பிரியந்தவை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். நூற்றுக்கணக்கானதாக பெருகுவதைப் பார்த்ததும், மேலாளர் பிரியந்த குமார அச்சமடைந்து, கட்டிடத்தின் மேல் கூரையில் ஏறியுள்ளார்.
எனினும், அவரை விரட்டிச் சென்ற மத வெறியர்கள் அடித்து விழுத்தி, வீதிக்கு இழுத்துச் சென்றனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் அவரை உதைந்தனர். மற்றும், கற்கள், இரும்பு கம்பிகளால் தாக்கி சித்திரவதை செய்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். பின்னர் அந்த கும்பல் உடலை தீ வைத்து எரித்தது.
சியால்கோட் துணை கமிஷனர் தாஹிர் ஃபரூக் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக் ஆகியோர் பெருமளவ பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றினர்.
உடலை உடனடியாக சியால்கோட்டின் அல்லாமா இக்பால் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கிறிஸ்தவரான பிரியந்த குமார, ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸில் 10 வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.

பொலிசார் வசிராபாத் வீதியில் இருந்து போராட்டக்காரர்களை கலைத்து மீண்டும் போக்குவரத்திற்காக திறந்தனர். பின்னர், குஜ்ரன்வாலா கமிஷனர் சுல்பிகார் கும்மான் மற்றும் பிராந்திய பொலிஸ் அதிகாரி இம்ரான் அஹ்மர் ஆகியோர் சம்பவம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
குற்றவாளிகளை பிடிக்க சியால்கோட் போலீசார் 10 அதிரடிப்படைகளை அமைத்தனர். பொலிஸ் வட்டாரங்களின்படி, இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையானது, பயங்கரவாதம் மற்றும் கொலைச் சட்டங்களின் கீழ் அடையாளம் தெரியாத டஜன் கணக்கானவர்களுக்கு எதிராக மோசமான கொலை மற்றும் உடலை எரித்ததற்காக உகோகி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இருந்து சித்திரவதை வீடியோக்களை போலீசார் சேகரித்தனர். 145 சந்தேக நபர்களை கைது செய்து அடையாளம் தெரியாத இடத்திற்கு மாற்றியதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த கொரூரத்துடன், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) அங்கத்தவர்களே ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர், “சம்பவம் துயரமானது என்றாலும், அதே சோகமான விஷயம் என்னவென்றால், TLP ஐ அதனுடன் இணைப்பதுதான். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் ஆட்சி நிலவும் போது, யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் துணிய மாட்டார்கள், ”என்று கூறினார்.
உயிரிழந்த 40 வயதான பிரியந்த குமார பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரி ஆவார். கணேமுல்ல பகுதியை சேர்ந்தவர்.