3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கரவொலியுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
கடந்த 19ஆம் தேதி குருநானக் ஜெயந்தியன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றாலும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
அதன்படி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி வலியுறுத்தினார். எனினும் உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் நடவடிக்கையின் முதல்படி தொடங்கியுள்ளது. இந்த மசோதா பின்னர் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்ட பிறகே 3 வேளாண் சட்டங்களும் அதிகாரபூர்வமாக ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.