எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண, இது தொடர்பில் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை இந்த வாரத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மூன்று விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சு அல்லது நுகர்வோர் விவகார அதிகார சபை உண்மைகளை மறைக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர்கள் தகவல்களை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
நிலைமையை கட்டுப்படுத்துவதே தமது நோக்கம் என இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற 233 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.
வெள்ளிக்கிழமை இரண்டு மாதிரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டதாகவும், சனிக்கிழமையன்று ஒரு அறிக்கை கிடைத்ததாகவும், அது மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மதிப்பாய்விற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
ஒரு அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.
இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 12 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று அறிக்கைகள் பெறப்பட்டு, மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், பின்னர் இந்த விடயம் தொடர்பில் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
எரிவாயு சிலிண்டரில் உள்ள கூறுகளின் விகிதம் ஏப்ரல் முதல் மாற்றப்பட்டது, அதே நேரத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தரநிலை 50-50 விகிதமாகஉள்ளது.
தரநிலை விகிதாசாரம் குறிப்பிடப்படவில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறியுள்ளமை பாரதூரமான விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், ஊடகங்களில் தவறான அறிக்கைகளை வெளியிடுவதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.