27.5 C
Jaffna
August 7, 2022
இந்தியா கட்டுரை

மீளப்பெறப்பட்ட  வேளாண் சட்டங்கள்; பலம் இழக்கும் மோடி அரசு!

♦கோவை நந்தன்

இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட நாட்களாக பெரும் சர்ச்சையையும் தொடர் போராடங்களையும் ஏற்படுத்திய சர்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மீளப் பெறப்படுவதான  கடந்த வார அறிவிப்பு மோடி அரசு  பலம் இழப்பதன் வெளிபாடே எனவும்,இது மோடியின் ஒரு இராஜ தந்திர நகர்வே என்கின்ற கருத்தும் பரவலாக இந்தியா பூராவும்  வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர் போராட்டங்கள் மட்டுமல்ல பல விவசாயிகளின் உயிரிழப்புக்கும் காரனமாய் அமைந்த, மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்கள்,அதனை  மீளப் பெறுவதான அண்மைய அறிவிப்பு என்பன தொடர்பான சர்ச்சைகள்  இந்தியாவையும் தாண்டி சர்வதேச அளவில் தற்போதைய பேசுபொருட்களில் ஒன்றாகி விட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து  முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம், 700 விவசாயிகளின் மரணம் என்பவற்றின் பிரதிபலிப்பே சர்ச்சைக்குரிய 3விவசாயச் சட்டங்களை நீக்குவதான அறிவிப்பு  என ஒரு சாராரும்,விரைவில் நடக்கவுள்ள உத்தரப் பிரதேசம்,விவசாய மாநிலமான பஞ்சாப் உட்பட்ட ஐந்து முக்கிய மாநில தேர்தல்ககளை கருத்தில் கொண்டே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியதாகவும், இது தற்காலிகமானதே என மற்றொரு சாராரும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்னமும் சில மாதங்களில் இடம் பெறவுள்ள இந்த மாநில தேர்தல்களில் வெற்றிபெற்றால் மட்டுமே, மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மையை பெறமுடியும் என்பது குறிப்பிடத் தக்கது. 22கோடிக்கும் மேற்பட்ட  மக்கள் தொகையை கொண்ட,தற்போது பிஜேபியின் கோட்டையாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள், நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை அது இழக்கும் என்பதை வெளிப்படுத்துவதும்,விவசாய மக்களையே அதிகமாக கொண்ட மாநிலமான பஞ்சாபில் பொதுக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலை  மோடி அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது.

  • வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம்,
  • அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம்,
  • விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டம், ஆகிய மூன்று முக்கிய சட்டங்களே தற்போது திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

பிஜேபி அரசின் இந்த பின்வாங்கல்  முடிவு, விவசாயிகளின் நலனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கும் உகந்த ஒன்று என்றும்,பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டங்களின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் இருந்தும் பொது அமைப்புகள் பலவற்றில் இருந்தும்  கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன,

இந்த விவசாயச் சட்டங்கள் தொடர்பில்,  விவசாயிகளின் ஆலோசனைகளையும்  பெற்று,முழுமையாக ஆராய்ந்து, சட்டங்களை நிறைவேற்றியிருந்தால், இத்தனை குழப்பங்களும், இழப்புகளும் ஏற்பட்டிருக்காது என்பதுவும், விவசாயிகளின் செலவை குறைத்து, வருமானத்தை இரட்டிப்பாக்கவே இப்புதிய சட்டங்கள் என அரசு அறிவித்திருந்தாலும்,உரம், மற்றும் விவசாய உற்பத்திப்  பொருட்களின் விலை ஏற்றத்தையும், விளை பொருட்களை கட்டுப்படியாகும் விலைக்கு விற்க முடியாத நிலையையுமே எதிர்கொண்டனர் விவசாயிகள் என்பதுவுமே  யதார்த்த நிலையாக இருந்தது.

தற்போது பிரதமர் மோடி நீக்க உள்ளதாக அறிவித்த இந்த மூன்று விவசாயச் சட்டங்களும், நவம்பர் 29ம் தேதி துவங்க உள்ள பாராளுமன்றத்தின்  குளிர்காலக் கூட்டத்தொடரின் போது அதிகார பூர்வ அறிவிப்பை எட்டும்  என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வரலாற்றில் தொடர் சர்ச்சையை ஏற்ப்படுத்திய இந்த சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குழப்பமானதொரு சூழ்நிலையில்  பாராளுமன்றத்தின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக இருக்கும் இந்தியரான  கீதா கோபிநாத், அமெரிக்க அரசுத் துறையின் வலதுசாரி பொருளாதார வல்லுனர்கள் சிலர்  மற்றும் இந்தியாவின் மோடிக்கு ஆதரவான, தொழில்துறை சார் ஊடகங்கள் என்பவற்றின்  ஆதரவுடன், இயற்றப்பட்ட இந்த சட்டங்கள் இந்தியாவின் பாமர மற்றும் விவசாய மக்களிடையே  வெகுஜன எதிர்ப்பையே எதிர்கொண்டு அரசை ஆட்டம் காண வைத்தது.

அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு பரந்து பட்ட உண்மையான வெகுஜன ஆதரவு இந்தியா பூராவும் இருந்து கிடைத்தது. பஞ்சாபின் சீக்கிய மற்றும் உத்தரபிரதேசத்தின் ஜாட் சமூகங்களைச் சேர்ந்த விவசாயத் தலைவர்கள் முன்னணியில் இருந்து போராட்டங்களை வழிநடாத்தினர்.நாடு முழுவதிலும் இருந்து பெண்கள் உட்பட்ட விவசாயிகள் கூட்டம் தலைநகர் டெல்லிக்கு படையெடுக்க, பயணிக்க முடியாத ஏழைகளும் வயதானவர்களும்  உள்ளூரிலேயே  ஒற்றுமையுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர், மாதக்கணக்கில் தெருக்களில் முகாமிட்டதிருந்த விவசாயிகள் பலதடவைகள், அரச வன்முறையை எதிர்கொண்டும் இலட்சியத்தில் உறுதியாகவே இருந்தனர்.எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையும், மனஉறுதியும்,இந்திய விவசாய சங்கங்களின் ஆழமான வேர்களுக்கு ஒரு சான்றாக அமைந்தது.

போராடங்களின் போது சில எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது, அதற்கெதிரான கண்டனங்கள் ​​தலைமையிடமிருந்து விரைவாக பிறப்பிக்கப் பட்டு வன்முறைகள் முளையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.எதிர்க்கட்சிகள் போராட்டங்களுக்கு வழங்கிய ஆதரவு அவர்களது  அரசியல் ஆதாயம் சார்ந்ததாக அமைந்திருக்கும் என்பதால்   போராட்டக் காரர்கள் அவர்களை கைக்கெட்டும் தூரத்திலலேயே  வைத்திருந்தார்கள். இங்கிலாந்து உட்பட உலகெங்கிலும் உள்ள சீக்கிய புலம் பெயர்ந்தோர் போராட்டத்திற்கு பெரும் ஆதரவைப் வழங்கினர்,.

ஒட்டு மொத்த மக்கள் கருத்தும் தமக்கு ஆதரவாக இருப்பதாக போராட்டக்காரர்கள் நிரூபித்தும், போராட்டங்களை  இழிவுபடுத்துவதற்காக  மோடி அரசாங்கம் எடுத்த பெரு முயற்சியும் செலவழித்த நேரமும் மக்கள் மத்தியில் பெரும் விரயத்தையே சந்தித்தது. விவசாயிகளின் போராட்டங்களிற்கு பின்னைய நாட்களில்  இடம் பெற்ற மாநில தேர்தல்களில்  மோடி அரசு தோல்விகளையே சந்தித்தது.

2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமும் (CAA), வேளான் சட்டங்கள் போலவே பெரும் எதிர்ப்பை சந்த்தித்ததும் அதன் பிரதிபலிப்பும்  மோடி அரசு மீதான   எதிர்ப்பலையை குறிப்பாக  இஸ்லாமிய  சமூகத்தின் பெரும் எதிர்ப்பை சந்தித்ததும் குறிப்பிடத் தக்கது.

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்  இருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக தப்பித்து  சட்டவிரோதமாக இந்தியாவில்  குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்த சட்ட மூலத்தில்,முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என குறிப்பிடப் பட்டுள்ளது மோடியின் இந்துத்துவ மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சட்ட மூலங்களால் மட்டுமல்ல கடந்த ஏழு ஆண்டுகளில் இந்து தேசியவாதத்தை ஊக்கப்படுத்தும்,பல நடவடிக்கைகளால் மோடி அரசின் மக்கள் ஆதரவு மட்டுமல்ல கருத்து வேறுபாடுகளுக்கான களமும் சுருங்கியே வருகிறது.

இந்துத்துவ கொள்கைகளையும், கோட்ப்பாடுகளையும்  எதிர்க்கும் மக்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் பலர் பொலிஸ் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  ஒரு முஸ்லீம் நகைச்சுவை நடிகர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.

பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் என்று தனது முதல் பதவிக் காலத்தின் ஆரம்பத்தில்  நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த போதிலும், இந்திய ஊடகங்களில் பல  இப்போது அரச பிரச்சாரப் பிரிவை ஒத்த கருத்தை மட்டுமே வெளியிடும் அளவுக்கு மாற்றப் பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களை மீளப் பெறுதல் என்கிற தற்போதைய அறிவிப்பின் வெற்றி இந்திய விவசாயிகளை சார்ந்தது என்றாலும் இந்த அறிவிப்பின் அறுவடையை நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசாங்கமே மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையே இந்திய சூழல் வெளிப்படுத்தி நிற்கிறது.

அதே வேளை சர்வதேச மட்டத்தில் மதச்சார்பற்ற நாடு இந்தியா என போற்றப்பட்ட நிலை மாறி இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்கிற நிலை வலுப்பெறுமானால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மட்டுமல்ல அதன் இருப்பே கேளிவிக் குறியாகும் நிலை எதிர் காலத்தில்  ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் காலமானார் : ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

divya divya

செல்போன் ஆலை பெண் ஊழியர்கள் 116 பேருக்கு வாந்தி, பேதி எதிரொலி: மறியலில் ஈடுபட்ட ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

Pagetamil

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!