‘நாங்கள் நீண்டகாலம் குடியிருந்த காணியொன்றை உரிமை கோரி திடீரென ஒருவர் வந்தார். அந்த காணி தன்னுடையதென்பதை சிவபெருமான் கனவில் வந்து காண்பித்தார் என அந்த நபர் எம்மிடம் தெரிவித்தார்’ – இவ்வாறு யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றமொன்றில் இடம்பெறும் காணி வழக்கில், பிரதிவாதிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள சைவ ஆலயமொன்றின் பரம்பரை தர்மகர்த்தாவினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியொன்றில் உள்ள காணியொன்றில் பொதுமக்கள் குடியிருக்கிறார்கள். அந்த காணி தம்முடையதென குறிப்பிட்டு, பரம்பரை தர்மகர்த்தாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ் நகரத்தில் கணிசமான காணிகளை கொண்டுள்ள ஆலய தர்மகர்த்தா அவர். அதிக காணியிருந்தால், அதிக வழக்கிருக்கும் தானே. அவரே பல வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
யாழ் புற நகரிலுள்ள காணியொன்றில் குடியிருக்கும் பல குடும்பங்களிற்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளான குடியிருப்பார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி,
‘கடந்த 25, 30 வருடங்களாக அந்தகாணிகளில் வசித்து வருகிறோம்.அண்மையில் ஒருவர் வந்து அந்த காணிகள் தம்முடையதென்றார். நாம் நீண்டகாலமாக குடியிருப்பதை சுட்டிக்காட்டினோம்.
எனினும், அவர் அதை ஏற்கவில்லை. சிவபெருமான் அண்மையில் கனவில் வந்து இந்த காணிகளை அடையாளம் காட்டியதாகவும், உறுதி இருக்குமிடத்தையும் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார். .
சிவபெருமான் காட்டிய இடத்தில் எடுத்த உறுதிப்பத்திரங்களை காண்பிக்குமாறு கேட்டோம்.
ஆவணங்களை எமக்கு காண்பிக்க மாட்டோம் என்றார். அதை காண்பிக்க வேண்டியவர்களிற்கு உரிய இடத்தில் காண்பிப்பேன் என கூறினார்’ என தெரிவித்துள்ளனர்.



