மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி நிதானமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்றைய நாளில் 88 ஓவர்கள் வீசப்பட்டது.
போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, பதும் நிசங்க தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் 50 ஓவர்கள் களத்தில் நின்று, அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
பதும் நிசங்க 56 ஓட்டங்களை பெற்று, முதலாவது விக்கெட்டாக வீழ்ந்தார். முதலாவது விக்கெட்டக்கு 139 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது.
2 விக்கெட் 164 ஓட்டங்களிலும், 3வது விக்கெட் 170 ஓட்டங்களிலும் வீழ்ந்தன. ஓஷத பெர்ணான்டோ, அஞ்சலோ மத்யூஸ் தலா 3 ஓட்டங்களை பெற்று, ரோஸ்டன் சேஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
திமுத் கருணாரத்ன தனது 13வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 132 ஒட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.
தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இருவரும் 4வது விக்கெட்டிற்கு 22.5 ஓவர்களில் 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், ஷானன் கேப்ரியல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
காலி மைதானம் 3ஆம் நாளின் பின் சுழற்பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரியாக மாறும் என்பதால், இலங்கை முதல் இன்னிங்சில் மேலும் 150 வரையான ஓட்டங்களை சேர்த்தால், மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 வது இன்னிங்ஸில் நெருக்கடியை சந்திக்கும்.