மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கோராவெளி வட்டவான் மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு வன இலகா திணைக்களத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் அண்டிய பிரதேசம் மற்றும் தாம் பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் காணிகளில் வன இலாகா திணைக்கள அதிகாரிகள் உட்புகுந்து பாதுகாப்பு வேலிகளை அகற்றுவதுடன் குடியிருப்பு நிலங்களை விட்டு வெளியேறும்படி பணித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இப் பிரதேசத்தில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் தேக்கு மரம் நடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் இப் பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மேலும் உயிர் இழப்புக்களை தாம் சந்திக்க நேரிடவுள்ளதாக தெரிவித்து, தேக்கு மரம் நடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி கிராமத்தில் நீண்டகாலமாக 100 ற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் பல சவால்களுக்கும் யானைகளின் அட்டகாசத்திற்கும் மத்தியிலும் வாழ்ந்து வருவதாகவும், அவ்வாறான நிலையில் வன இலாகா திணைக்களம் தேக்கு மரங்கள் நடும் திட்டத்தினை ஏற்படுத்தி தமது பொருளாதாரத்தை சீரழித்து வாழ்வாதாரத்தை முடக்கி அப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக கூறுகின்றனர்.
இத்திட்டத்தினை மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தாமல் மக்கள் வாழும் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதாக குற்றம் சுமத்துகின்றனர். தேக்கு மரம் வளர்ந்து எதிர்வரும் காலத்தில் யானைகள் மறைந்திருந்து இலகுவாக தங்களை தாக்குவதற்கு வசதியாக அமையும் என்ற அச்சம் தெரிவிக்கின்றனர்.
காலை 9மணிக்கு ஆரம்பிக்கபட்ட போராட்டமானது பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
மக்களின் கோரிக்கையை பெற்றுக்கொண்ட உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா உரிய தீர்வினை பெற்றுத் தர மேலதிக நடவடிக்கைக்கா அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினார்.
இதனை ஏற்க மறுத்தவர்கள் வன இலாகா திணைக்கள அதிகாரிகள் தம்மை வந்து சந்தித்து தீர்வு வழங்க வேண்டும் எனக் கூறி பிரதேச செயலக வாசல் முன்பாக அமர்ந்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
வன இலாகா அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சமூகம் தந்து இத்திட்டம் தொடர்பான நிலமைகளை மக்களுக்கு விளக்கமளித்தனர்.
இதனை ஏற்றுகொள்ளாத மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் 1 வார காலம் இத்திட்டத்தினை இடைநிறுத்தி வைப்பதாகவும் தங்களது மேலதிகாரியின் ஆலோசனை மற்றும் பிரதேச செயலகத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து நல்லதொரு தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்களான கு.குணசேகரம், கி.சேயோன் மற்றும் பலர் பங்குபற்றியிருந்தனர்.




