கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்படுவது இதுவே முதல் முறை.
இன்று பிற்பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதற்கு கச்சா எண்ணெய் பற்றாக்குறையே காரணம் எனவும், டிசம்பர் மூன்றாம் வாரத்தில் எண்ணெய் கப்பல்கள் வரும் வரையில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். .
டிசம்பரில் வரவிருக்கும் கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 90,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் வினவிய போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்தார். நாட்டில் போதியளவு எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும், எண்ணெய் தட்டுப்பாடு இருப்பின் அதனை முன்கூட்டியே தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.