பேஸ்புக்கில் காதல் வலைவீசி, குடும்பஸ்தர் ஒருவரிடமிருந்து பெருந்தொகை பணத்தை பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா நெருக்கடி ஆரம்பித்த பின்னர், வீட்டிலிருந்தே ‘தொழில் செய்து’ புது வீடு கட்டி, வாகனமும் கொள்வனவு செய்துள்ளனர்.
பேஸ்புக்கில் அறிமுகமானவரை காதலியென நம்பி, மனைவிக்கு தெரியாமல் அந்தரங்க உறவை வளர்த்த குடும்பஸ்தர், ஏமாந்து அந்தரித்த சம்பவம் தொடர்பான முழுமையான விபரம் வருமாறு-
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்தார் காதர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு நாள் அவரது முகநூல் கணக்கிற்கு, அழகான பெண் ஒருவரின் படத்துடன், நட்பு கோரிக்கை வந்தது. அழகான பெண், தானாக வந்து நட்பு பாராட்டுகிறார்… யாருக்குத்தான் சபலம் தட்டாது?. காதருக்கும் தட்டியது..
அந்தப் பெண்ணும், காதரும் பேஸ்புக்கில் சட் செய்ய ஆரம்பித்தனர். தன்னை பாத்திமா என அந்தப் பெண் அறிமுகப்படத்தினார்.
பேஸ்புக் நட்பு ஆழமாகி, இருவருக்குள்ளும் காதல் உறவு ஆரம்பித்தது. பேஸ்புக் மூலம் தொலைபேசி எண்களை பரிமாறி, வட்ஸ்அப் வழியாகவும் உரையாட ஆரம்பித்தனர்.
வட்ஸ்அப்பில் உரையாட ஆரம்பித்தால், காதலர்களின் எழுதப்படாத விதிப்படி, அடுத்த கட்டமாக ஏடாகூடமான புகைப்படங்களையும் பகிர ஆரம்பித்தனர்.
இத்தனைக்கும் காதர் திருமணமானவர்.
ஒருநாள் பாத்திமா தான் கேட்டார். ‘உங்களின் ஆடையில்லாத புகைப்படமொன்றை அனுப்ப முடியுமா?’ என. காதர் அதை அனுப்பினார். இந்த விவகாரத்தில் ஆண்கள் பயங்கர கில்லாடிகளாயிற்றே. கொடுத்ததை வட்டியுடன் கேட்பார்கள். அப்படித்தான் காதரும் கேட்டார். பாத்திமாவும் பல நிர்வாண புகைப்படங்களை அனுப்பினார்.
பேஸ்புக் காதல், வட்ஸ்அப் காதலாக மாறி, இப்படியே நீண்டு கொண்டிருந்த போது, ஒருநாள் காதரின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.
மறுமுனையில் ஒரு ஆண்.
‘ஹலோ.. காதரா பேசுகிறீர்கள்’
‘ஓமோம்… நீங்கள் யார்?’
‘நான் பாத்திமாவின் கணவர்’
காதருக்கு குரல் வரவில்லை.
பாத்திமாவின் கணவர் என கூறி பேசியவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். எனது மனைவிக்கு தொலைபேசியில் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளீர்கள். நான் இது பற்றி பொலிசில் முறையிட்டு, இணையத்திலும் பதிவிட போகிறேன். அப்படி செய்யாமலிருப்பதெனில் 600,000 ரூபா பணம் தர வேண்டுமென கூறினார்.
கிட்டத்தட்ட, தினமும் தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்து வந்தார். காதர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பலனில்லை.
இறுதியில், வேறு வழியின்றி பணத்தை செலுத்த முடிவு செய்தார். அக்கரைப்பற்று, ஒலுவில் 02 கட்டார் வீட்டுத் திட்டத்திற்கு அருகில் செப்டெம்பர் 23 ஆம் திகதி இரவு 7 மணியளவில் பணத்தை ஒப்படைத்தார்.
அந்த பகுதியில் குறிப்பிட்ட இடமொன்றில் பணத்தை வைத்து விட்டு செல்லுமாறு கூறப்பட்ட படி, அங்கு பணத்தை வைத்து விட்டு சென்றிருந்தார்.
இதன்பின்னர்தான் காதருக்கு தெரிய வந்தது, பத்திமா அனுப்பிய நிர்வாண புகைப்படங்கள் போலியானவை, அவை இணைத்தில் பெறப்பட்டவை என்பது.
பிரச்சனையிலிருந்து தப்பித்து விட்டேன், குடும்பம் குலையாது என நிம்மதி பெருமூச்சு விட்ட சமயத்தில், பாத்திமாவின் கணவர் மீண்டும் தொடர்பு கொண்டு, மேலும் 600,000 ரூபா பணம் செலுத்த வேண்டுமென்றார்.
கடந்த மாதம் 600,000 ரூபா, இந்த மாதம் 600,000 ரூபா என்றால் எப்படி என்னால் செலுத்த முடியும் என காதர் எகிறினார். அப்படியானால் அந்த புகைப்படங்களை பகிரங்கப்படுத்துகிறேன் என பாத்திமாவின் கணவர் கூறினார்.
எப்படியாவது பணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம். இல்லையேல் நிர்வாண படங்கள் வெளியாகி, குடும்பமும் குலைந்து, சமூகத்தில் அவமானமாகி விடும் என காதர் தலையை பிய்த்துக் கொண்டிருந்தார்.
நண்பர்களிடம் பணம் கடனாக பெற காதர் முடிவு செய்தார். சில நண்பர்களிடம் பணம் கேட்டார். ஒரு நண்பர் துருவிதுருவி விசாரித்ததில், காதர் உண்மையை சொன்னார். இதன் வழியாக, அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல் சென்றது.
துரிதமாக செயற்பட்ட பொலிசார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.
காதரை அழைத்து விசாரணை செய்த பொலிசார், காதர் மூலமாகவே மோசடியாளர்களிற்கு பொறி வைத்தனர். 600,000 ரூபா பணத்தை ஒப்படைப்பதாக பாத்திமாவின் கணவருக்கு கூறுமாறு, காதருக்கு பொலிசார் அறிவுறுத்தினர்.
கடந்த 29ஆம் திகதி மாலை பணத்தை ஒப்படைப்பதாக காதர் கூறினார்.
அதன்படி, அக்கரைப்பற்று, ஒலுவில் 02 கட்டார் வீட்டுத் திட்டத்திற்கு அருகில் மீண்டும் பணத்தை வைத்தார். அவர் பணத்தை வைத்து விட்டு சென்ற சிறிது நேரத்தின் பின், அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. பணம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சற்று தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, இறங்கிச் சென்று பணப்பையை எடுத்தார்.
மறைந்திருந்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கைதான நபரும், அவரது சகோதரியின் மகளான 27 வயதான பெண்ணும் இணைந்துமே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண்ணின் கணவர் பிரிந்து வாழ்கிறார். 2 பிள்ளைகளின் தாயான அவர், இளம் யுவதியாக பேஸ்புக்கில் வலைவிரித்துள்ளார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, சாய்ந்தமருது, ஒலுவில் போன்ற பிரதேசங்களில் பலரை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.
கப்பம் பெற பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும், பெண்ணின் கையடக்க தொலைபேசியையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். அவரது கையடக்க தொலைபேசியில் சுமார் 15 ஆண்களின் நிர்வாண புகைப்படங்கள் காணப்பட்டன.
அதில் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்- இந்த 15 பேரில், இறுதியாக சிக்கியுள்ளவரின் படமும் உள்ளது. அவருடன் இப்போதுதான் உறவை ஏற்படுத்தியுள்ளார். தன்னை தென்கிழக்கு பல்கலைகழக மாணவியென கூறியே உறவை ஏற்படுத்தியுள்ளார்.
கோடீஸ்வர தொழிலதிபர்கள் சிலரையும் வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களிடமிருந்து 10, 15, 30 இலட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் மூலம் அவர்கள் புதிய வீட்டையும் கட்டியுள்ளனர். புது முச்சக்கர வண்டி வாங்கியுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். கொரோனா நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து இந்த மோசடியை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
கப்பம் பெற்ற மாமாவும் மகளும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவானால் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.