உலகிலேேய முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே கழுதைப்புலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதி்க்கப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காவில் உள்ள 22 வயதான கோஸி, 23 வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரு கழுதைப்புலிகளுக்கும் அடிக்கடி இருமல், மூக்கில் சளிவருதல், சோர்வடைந்திருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
டென்வர் உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகளுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதன்பின் மற்றவிலங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கழுதைப்புலியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
கழுதைப்புலிகள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதுவரை டென்வர் உயிரியில் பூங்காவில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வனஉயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “கழுதைப் புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடினமானது. அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை கழுதைப்புலிகள், ஆந்த்ராக்ஸ், ரேபிஸ், போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களையும் தாங்கி உயிர்வாழக்கூடியவை கழுதைப்புலிகள். அவைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வியப்புக்குரியது, மற்றவகையில் கழுதைப்புலிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.