இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கப்டன் ராகுல் திராவிட்டை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது.
டி20உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தபின், நியூஸிலாந்து தொடரிலிருந்து இந்திய அணிக்கு பயிற்சியாளர் பணியை திராவிட் கவனிக்க உள்ளார். ராகுல் திராவிட்டுக்கு ஆண்டு ஊதியமாக இதுவரை எந்தப் பயிற்சியாளருக்கும் வழங்காத வகையில் ரூ.10 கோடி நிர்ணயிக்கப்பட்டதுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு நடக்கும் 50ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டி வரை திராவிட் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருப்பார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் “ சுலோச்சனா நாயக், ஆர்.பி.சிங் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட்டின் ஆலோசனைக் குழு, இந்திய சீனியர் அணியின் தலைமைப்பயிற்சியாளராக ராகுல் திராவிட்டை நியமித்துள்ளது. வரும் 17ஆம் திகதி நியூஸிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து திராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 வயதாகும் ராகுல் திராவிட், இந்திய அணிக்காக விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர். இந்திய டெஸ்ட் அணியில் இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படக்கூடியவர் திராவிட்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கும், இந்திய ஏ அணிக்கும் திராவிட் பயிறச்சியாளராக இருந்தார், அதன்பின் என்சிஏ இயக்குநராகவும் திராவிட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக திராவிட் சம்மதிக்கவி்ல்லை. தனது குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வந்தன. அதன்பின் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரும் திராவிட்டை துபாய்க்கு வரவழைத்து அவரை சமாதானம்செய்து, இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க வைத்தனர்.
ராகுல் திராவிட் பயிற்சி்யாளராக சம்மதம் தெரிவித்தபின், பயிற்சியாளர் பதவிக்கு வந்த வேறு எந்த விண்ணப்பத்தையும் பிசிசிஐ பரிசீலிக்கவில்லை. திராவிட் விண்ணப்பித்தவுடன் அவரின் விண்ணப்பம் விரைவாக பரிசிலீக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தார்போல் அதிகமான ரன்களை எடுத்தவர் திராவிட். 164 போட்டிகளில் 13,288 ரன்கள், 344 ஒருநாள் போட்டிகளில் ஏறக்குறைய 11 ஆயிரம் ரன்களை திராவிட் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 36 சதங்களை திராவிட் அடித்துள்ளார்.
இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த், இஷான் கிஷன்,ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் திராவிட்டால் என்சிஏ அகாடெமியிலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் செதுக்கப்பட்டவர்கள்.
திராவிட் நியமனம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் “ராகுல் திராவிட் மிகச்சிறந்த வீரர், இந்தியக் கிரிக்கெட்டுக்கும், இளம் வீரர்களை உருவாக்கும் என்சிஏவுக்கும் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். இந்திய அணிக்கு திராவிட் பயிற்சியாளராக வந்தபின் புதிய உச்சத்தை இந்திய அணி தொடும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.