பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய ராஜஸ்தான் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அண்மையில் நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனையடுத்து இருநாட்டவரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் காஷ்மீர் மாநில மாணவர்கள் மீது மற்ற மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். அதேபோல், காஷ்மீரில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நஃபீஸா அட்டாரி தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், நாங்கள் வெற்றிபெற்றோம்.. என இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதி பாகிஸ்தான் வீரர்களின் படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதனால் அந்தப் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ன் கீழ் வன்முறையைத் தூண்டும் விதமாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அந்த ஆசிரியை ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் தான் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இவ்வாறு பதிவிடவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும், அவர் வேலை செய்த பள்ளியில் இருந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.