கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திரங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிக்க அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் , முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.
சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதம நீதியரசர் நியமித்த நாமல் பலாலே, (தலைவர்) ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.