விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் திகதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் சுகந்தன், ஆரோக்கிய சேவியர் மற்றும் ராஜ்கிரன் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அன்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட போது மீன்பிடி படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த மூவரும் நடுக்கடலில் மாயமாகினார்;.
சுகந்தன் மற்றும் ஆரோக்கிய சேவியர் ஆகிய இரு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்ட நிலையில் நடுக்கடலில் மாயமான மீனவர் ராஜ்கிரண் உடல் இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின் கடந்த 20ஆம் திகதி காலை நெடுந்தீவு அருகே மீட்கப்பட்டது.
மீனவரின் உடலை யாழ்பாணம் பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் உடல் சர்வதேச கடல் எல்லை ஊடாக மீனவர் ராஜ்கிரன் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.
இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட ஆரோக்கிய சேவியர், சுகந்தன் ஆகிய இருவரையும் உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான், மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக தவறுதலாக இலங்கை எல்லைக்குள் வந்ததாகவும் படகு நடுக்கடலில் மூழ்கியதால் இவ்வழக்கிலிருந்து மீனவர்களை இருவரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள மீரிஹான முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலமாக அல்லது இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 14ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தற்போது யாழ்பாணம் சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ள 23 நாகப்பட்டினம் மீனவர்களின் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.