தங்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தும் ஆசிரியர்களின் குரலை பொலிசார் மிரட்டி, அடக்க முயல்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கங்கள் அமைத்துள்ள கூடாரத்தை அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இன்று பிற்பகல் முயற்சித்ததால் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டம் நடத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கத்தினால் கூடாரம் பயன்படுத்தப்பட்டது.
அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷெஹான் திஸாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் கூட பொலிஸார் தமது போராட்டத்தை இடையூறு செய்ததாக தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின்றி அந்த இடத்தில் இருந்த கூடாரத்தை போலீசார் அகற்றியதுடன் ஆசிரியர்களை அச்சுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
பொலிஸார் சட்டத்தை துல்லியமாக அமுல்படுத்துவதில்லை என தெரிவித்த ஷெஹான் திஸாநாயக்க, அச்சுறுத்தலுக்கு உள்ளானால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.