மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டக்கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி ஊடக மையமும், சிவில் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் பின்னிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயூர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகம் வரை சென்று ஜனாதிபதி, பிரதமர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டன.
மேற்படடி மகஜர்களை மாவட்ட மாவட்ட அரசாங்க அதிபர் சார்பாக முதல்நிலை மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருலிங்கநாதன் பெற்றுக்கொண்டதுடன், உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இதற்கான கூட்டம் ஒன்றும் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டுவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேடகவனம் செலுத்தி வரும் தங்களின் செயற்பாட்டிற்கு சிவில் சமூக அமைப்புக்களும், கிளிநொச்சி ஊடக மையமும் நன்றிகளை தெரிவிப்பதோடு, தங்களுடைய கவனம் மேலும் இந்த மாவட்டத்திற்கு தேவை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரிசனைகொண்டு நீண்ட காலமாக சிவில் சமூக அமைப்புக்களிலும், கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளிலும் அதற்கு மேலாக ஊடகவியலாளராகவும் பணியாற்றிவரும் திடீர் மரண விசாரணை அதிகாரியான சிங்கராசா ஜீவநாயகம் கடந்த 18ம் திகதி இரவு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடமையின் நிமித்தம் சென்றிருந்தவேளை கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் இரவே கிளிநொச்சி பொலிஸ் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். ஆனால்; கிளிநொச்சி பொலிசாரிற்கு நன்கறிந்த குற்ற செயலுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களுடன் பொலிசார் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதேவேளை, அண்மையில் கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியிலே இரு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவார காலமாக தாக்குதலாளிகள் மீது பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீளவும் பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் வைத்து மீளவும் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனைவிட, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில், சட்டவிரோத மணலகழ்வு மேற்கொள்பவர்களால் ஒரு வயோதிபர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன், மணல் அகழ்வுகளை தடுக்க செல்லும் கிராம அலுவலர்களும் மண் மாபியாக்களால் கொலை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி நகரத்திற்கு அண்மித்த பகுதியில் மிக துணிச்சலாக சட்டவிரோத மது உற்பத்தி மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு இளைஞர்கள் தகவல் வழங்கியுள்ளனர். 119 இலக்கத்தின் ஊடாகவும், கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்திற்கு ஏனைய வழிகளிலும் இளைஞர்களாலும், ஊடகவியலாளர்களாலும் இவ்வாறு தகவல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 10 நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 2 மணி நேரம்வரை குறித்த பகுதிக்கு பொலிசார் செல்வதற்கு பின்னடித்துள்ளனர். பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் ஊடாக முற்றுகையிடப்பட்டு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவமும் மிக அண்மையில் பதிவாகியிருந்தது.
இவை அனைத்துக்கும் பின்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையில் இருக்கும் பெரும்பாலான பொலிசாரே, குறிப்பாக உயர் பதவிநிலை அதிகாரிகள் துணை நிற்பதாக அறிய முடிகின்றது. குறைந்த அளவு சனத்தொகை கொண்ட எமது மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தவோ, அல்லது பொலிசார் சட்ட ஒழுங்கை சரியாக பேணுவதற்கோ முன்வராமை அனைவரிடத்திலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி வருகின்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட அருட்தந்தை டிக்சன் உதயச்சந்திரன், கிளிநொச்சி ஊடக மையத்தின் ஆலோசகர் மு.விவேக், கிளிநொச்சி பிரஜைகள் குழுவின் தலைவர் சி.சின்னராசா, ஆசிரிய ஆலோசகரும், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியுமான தி.சிவரூபன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் அண்மையில் தாக்கப்பட்ட சிங்கராசா ஜீவநாயகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசார் உரிய முறையிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.