2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்வதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்த முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் மேற்கோள் காட்டப்பட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. .
நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோரை கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளான வசந்த கரன்னகொட மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோருக்கு உத்தரவிட்டது.
கடத்தப்பட்ட இளைஞரின் நான்கு உறவினர்களால் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் விசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்ளீட் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடரப்படாது என்று சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரச சட்டத்தரணி புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.