சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தலையீட்டை முறியடிக்க வழியமைக்கும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 மணிநேர விவாதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை அது பெற்றது.
75 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவும், 11 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
உள்நாட்டு அரசியல் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை முடக்குவதற்கு, இணையச் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட, புதிய சட்டம் அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கும்.
அந்தச் சட்டத்தில் இடம்பெறும் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டைக் கையாள, நிலைத் தீர்ப்பாயம் ஒன்றும் கடும் பரிசீலனைக்குப் பிறகு அமைக்கப்படும்.
புதிய சட்டத்தை அறிமுகம் செய்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அதற்கான தேவை பற்றியும் விளக்கினார்.
வெளிநாட்டுத் தரப்புகளின் ஏற்பாட்டிலும் நிதி ஆதரவிலும், இணையம் வழி மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கான சூழ்ச்சியை மற்ற பல நாடுகள் எதிர்நோக்கியதை அவர் சுட்டினார்.
2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதன் அண்டை நாடு ஒன்றிடம் இருந்தும் அத்தகைய நிலையை எதிர்நோக்கியதாக அவர் தெரிவித்தார்.
அனைத்துலக நடுவமாக சிங்கப்பூர் செயல்படுவதைக் குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், வெளிநாட்டினருடனான தொடர்புகளைக் கட்டுப்படுத்துவது அந்தச் சட்டத்தின் நோக்கமல்ல என்றார்.
எனினும், மனித உரிமை அமைப்புக்கள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. நபர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாமலாக்கும் என தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு தலையீட்டை தடுக்க சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் இதேபோன்ற சட்டங்களை இயற்றியமை குறிப்பிடத்தக்கது.