கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, “அந்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன“.
சம்பவத்தில் 4 பொலிசார் காயமடைந்துள்ளதுடன் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் இருவர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.