பருத்தித்துறை மாவட்ட நீதிபதிக்கு அநாகரிகமாக சைகை காண்பித்து, தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட மூவரை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
போதையின் உச்சத்தில் உலகமே தலைகீழாக தெரிய, இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் இன்று (04) மாலை 4.20 மணி அளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது.
தொண்டமானாறு, வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 மற்றும் 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர். நெல்லியடி நகர தரிப்பிடத்திலுள்ள முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சென்ற போதே, இந்த “வெறியாட்டத்தில்“ ஈடுபட்டனர்.
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி, தனது உத்தியோகபூர்வ காரில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் பயணித்துள்ளார். இதன்போது, வீதி ஒழுங்குகளை மீறி, விபத்தை ஏற்படுத்தும் விதமாக முச்சக்கர வண்டியொன்று பயணித்தது.
இதையடுத்து, அந்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை நீதிபதி கண்டித்துள்ளார்.
மதுபோதையின் உச்சத்தில் இருந்த அவர்கள், தமக்கு அறிவுரை கூறுவது நீதிபதியென்பதையே உணராமல், அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், ஆபாசமாக சைகை காண்பித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த முச்சக்கர வண்டியின் பின்னால் நீதிபதியின் வாகனம் பயணித்தது. சில நூறு மீற்றர் தொலைவில் இராணுவம், பொலிசாரின் வீதித்தடையொன்று உள்ளது. அந்த இடத்தில் வழங்கப்பட்ட தகவலிற்கமைய, மதுபோதை ஆசாமிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.