மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு போலஸ் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அவர் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இருந்து கோவா, குஜராத் அருகே உள்ள டாமன், டையூ உள்ளிட்ட இடங்களுக்கு கப்பலில் சுற்றுலா நடத்தப்படுகிறது. இதற்காக சில தனியார் நிறுவனங்கள் சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துகின்றனர்.
இந்த சொகுசு கப்பலில் சுமார் 1000 பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த உல்லாச கப்பல் பயணங்களில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பங்கேற்பது வாடிக்கை. வழக்கமாக வார இறுதி நாட்களில் இந்த பயணங்கள் நடைபெறுகின்றன.
இதுபோன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று சனிக்கிழமையன்று மும்பையில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு கோவா வழியாக மீண்டும் 4ஆம் திகதி காலை மும்பை திரும்பும் வகையில் அந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
800 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி நேற்று மதியம் அந்த சொகுசு கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியது.
இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றனர். அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர்.
நேற்று இரவு கப்பலில் நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. பயணிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடினர். அப்போது அவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக களத்தில் குதித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர். போதைப் பொருட்களை விநியோகம் செய்த 8 இளைஞர்களை கைது செய்தனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்திய இளைஞர்கள், இளம் பெண்களையும் தனிமைப்படுத்தி அவர்கள் விசாரணை செய்தனர். அப்போது அவர்களில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரிய வந்தது. அனைவரும் மும்பை அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்தனர். ஆரியன் யார் யாருடன் பேசினார், என்பது பற்றி விசாரித்தனர். பின்னர் ஆரிய கான், அர்பாஸ் சேத் மேர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஐந்து சந்தேக நபர்களான நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மொஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர் மற்றும் கோமித் சோப்ரா ஆகியோரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படுகின்றன, அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்படலாம்.