சுகாதார சேவையில் 44 தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணி முதல் ஐந்து மணிநேர கூட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
6 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படுகிறது என அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐந்து மணி நேர வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று மதியம், நாடெங்கிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் முன்பாக போராட்டப் பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இருப்பினும், கோவிட் சிகிச்சை மையங்கள், குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, மகரகமவிலுள்ள அபேக்ஷா மருத்துவமனை மற்றும் இதர சிறப்பு சிகிச்சை நிலையங்களில் உள்ள ஊழியர்கள் சேவைகளில் இருந்து விலக மாட்டார்கள் அவர் கூறினார்.
அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதாரத் துறையின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக ரத்னப்ரிய கூறினார்.
தாதியர்கள், துணை மருத்துவ சேவைகள், ஓட்டுநர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
கோவிட் தொற்றை எதிர்கொள்ள தேவையான வசதிகளை வழங்குதல், கோவிட் தொற்று முடிவடையும் வரை மேலதிக நேர 7,500 ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்குதல், மேலதிக நேர விடுமுறை தின கொடுப்பனவு கட்டுப்பாடுகளை அகற்றுதல், சகல சுகாதாரத்துறை வெற்றிடங்களையும் நிரப்புதல், கோவிட் விசேட விடுமுறையை தொடர்ந்து வழங்குதல், பல்நோக்கு மேம்பாட்டு குழுவினரை சுகாதார நிறுவனங்களில் இணைப்பதை நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.