வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று (21) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரை பின் தொடர்ந்து பல்சர் மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை இழுத்து அறுதுக் கொண்டு பல்சர் ரக மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய போது, குறித்த பெண் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள், திருடனை கார் ஒன்றில் விரட்டிச் சென்றதுடன், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கும் தகவல் வழங்கினர்.
திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்திக்கு சென்றபோது அங்கிருந்த வந்த பொலிசாரும், விரட்டிச் சென்ற இளைஞர்களும் இணைந்து திருட்டில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மோட்டர் சைக்கிளை பொலிசில் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிசார், குறித்த நபரிடம் இருந்து அறுத்தச் செல்லப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டை கருப்பு துணியினால் மூடிக்கட்டிக் கொண்டே வந்துள்ளார்.