இலங்கை தமிழ் அரசு கட்சி விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலும், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை தொடர தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்தியகுழு நேற்று முன்தினம் (18) அங்கீகாரமளித்தது.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு ரெலோவின் மத்தியகுழு கூடிய போது இந்த முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், சி.சிறிதரன் போன்றவர்களின் சீண்டல்களை, கூட்டமைப்பின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு இதுவரை பொறுத்ததை போலல்லாமல், இனிமேல் சுடச்சுடன பதிலடி கொடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சூம் வழியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஆரம்பத்தில், ஜெனீவாவிற்கு அனுப்பிய கடித விவகாரம் விவாதிக்கப்பட்டது. தமிழ தேசிய நிலைப்பாடைய கட்சிகளுடன் இணைந்த கடிதம் அனுப்பியதை பாராட்டிய மத்தியகுழு, அந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்தது.
அண்மைக்காலமாக எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றவர்கள் தம்மை தூண்டும் விதமாக செயற்படுவதாகவும், கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களிற்கு உடனடி பதில்கள் வழங்க வேண்டுமென்றும் பரவலாக வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும், தமிழ் அரசு கட்சிக்குமிடையிலுள்ள கள்ள உறவிற்கு பலியாகி விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என இலங்கை தமிழ் அரசு கட்சி முயற்சிகளை ஆரம்பித்தாலும், நிபந்தனையற்ற பேச்சுக்கு ரெலோ செல்லக்கூடாதென்றும், அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட சில முன்நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.




