போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவர் காரில் தப்பிச் சென்றபோது, அவரை பிடிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காரில் தொங்கிக் கொண்டு சென்ற பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.
சினிமா படங்களையும் விஞ்சும் இந்த காட்சிகள் பதிவாகிய சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நுகேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகிரிய, ஒபேசேகரபுர சந்திப் பகுதியில் இன்று (20) இந்த சம்பவம் இடம்பெற்றது.
சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் பொலிஸ் உத்தியோகத்தர் காரில் தொங்கிக் கொண்டு பயணித்துள்ளார். இறுதியில் காரிலிருந்து விழுந்து, பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவலொன்றின் பிரகாரம் இரகசிய பொலிசார் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது முச்சக்கர வண்டியில் கொண்டு வரப்பட்ட இரண்டு பொதி போதைப்பொருட்கள், காரில் வந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதைப்பொருள் பொதிகள் காரினுள் காணப்பட்டன.
துரிதமாக செயற்பட்ட பொலிசார், முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ததுடன், காரை சுற்றிவளைத்தனர். எனினும், கார் சாரதி கதவை திறக்க மறுத்து விட்டார். பொலிசாரின் பிடியிலிருந்து காருடன் தப்பிச் செல்ல முயன்றார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காரின் முன்பக்கமாக பாய்ந்து ஏறிவிட்டார்.
அவர் காரின் முன்பக்கமாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரன் வேகமாக காரை செலுத்தியுள்ளார். இடையிடையே பிரேக பிடித்து, அவரை விழுத்த முயன்றார்.
சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் இந்த பரபரப்பான ஓட்டம் இடம்பெற்றது.
காரிலிருந்து விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் தலை, காலில் பலத்த காயமடைந்த நிலையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




