போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை முமைத்கானிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
போதைப் பொருள் விற்பனை செய்ததாக இசைக்கலைஞர் கால்வின் மஸ்கேரன்ஹாஸ் உள்ளிட்ட 3 பேரை தெலங்கானா கலால் துறையினர் கடந்த 2017 ஜூலையில் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரின் பெயர்களும்வெளிப்பட்டன. இதையடுத்து தெலங்கு திரையுலக இயக்குநர்கள், நடிகர், நடிகைகளிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத் துக்கு பிறகு இந்த விவகாரம் சூடுபிடித்தது. நடிகர் சுஷாந்தின் காதலி ரியாஉள்ளிட்டோர், போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் விற்பனை தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கால்வினிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன.
ஹைதரபாத் எஃப் கிளப் உரிமையாளரும், நடிகருமான நவ்தீப்பும், கிளப் மேலாளரும் இணைந்து கால்வின் உதவியுடன்தெலுங்கு திரையுலக பிரபலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்திருக்கலாம் என அமலாக்கத் துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த சுமார் 12க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 31 முதல் இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர் கள் ராணா டகுபதி, ரவி தேஜா, பி.நவ்தீப் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் 7வது நபராக நடிகை முமைத் கான் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.
பிரபலங்களின் வங்கிக் கணக்குகளில் கடந்த ஓராண்டில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் வரும் 22ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
போதைப் பொருள் விவகாரத்தில் பணப் பரிமாற்றம் யார் மூலம் நடந்தது, எப்படி நடந்தது, இதற்கு முக்கிய காரணம் யார் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.