சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்கிற்கு உயர் நீதிமன்றம் 04 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து அவர் நாடாளுமன்ற அங்கத்துவத்தையும் இழந்தார். அவருக்கு பொதுமன்னிப்பளிக்கும்படி சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஞ்சனிற்கு பொதுமன்னிப்பளிக்கும்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி இலங்கையின் தேசிய கைதிகள் தினத்தன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு ரஞ்சனிற்கு கிடைக்குமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபயர் மன்னிப்பை வழங்குவார் என்று நம்புகிறேன். எங்கள் அன்பு நண்பர், பிரபல நடிகர், பரோபகாரர், சமூக சேவகர் மற்றும் மக்கள் பிரதிநிதி ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என நம்புகிறேன்” எக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார்.



