முக்கோண காதல் கதைகள் சிக்கலானவை. விசித்திரமானவை. இதனால்தான், தமிழ் சினிமா காலாகாலத்திற்கு திகட்டாமல் முக்கோண காதல் கதைகளை படமாக்கிக் கொண்டிருகிறது. அப்படியொரு விசித்திரமான, வினோதமான முக்கோண காதல் கதையொன்று இடம்பெற்றுள்ளது. இப்படியொரு காதல் கதையை இதற்கு முன் கேள்விப்பட்டேயிருக்க மாட்டீர்கள்.
ஒரு முக்கோண காதல்கதையின் உச்சக்கட்டத்தை தீர்மானிக்க- அதாவது இரண்டு காதலிகளில் ஒருவரை மனைவியாக்க- ஊர் கூடி, நாணயம் சுண்டிய திகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திரைப்பட கிளைமாக்ஸையே மிஞ்சும் இந்த சம்பவம், இந்தியாவின் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சக்லேஷ்பூர் தாலுகாவில் நிகழ்ந்தது.
சக்லேஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், கடந்த வருடம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 20 வயது யுவதியை சந்தித்துள்ளார். அவருக்கு யுவதியை பிடித்துப் போனது. வழக்கமான காதல் அகராதியின் பிரகாரம் என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்து அவரை கவிழ்த்தார்.
இருவரும் காதல் பறவைகளாக சிறகடிக்க ஆரம்பித்தனர்.
இந்த காதல் உறவுக்கு மத்தியில், 6 மாதங்களின் முன்னர் 19 வயதான இன்னொரு யுவதியை சந்தித்துள்ளார். தனக்கு ஏற்கனவே காதல் இருப்பதை மறந்தார். அதை அந்த யுவதியிடமும் மறைத்தார்.
நமது முருகன் வள்ளி, தெய்வானையாக இரண்டு காதல்களை உருவாக்கிக் கொண்டார். ஆனால், இரண்டு காதலிகளுக்கும் தமது காதலன் இந்த விவகாரத்தில் “முருகன்“ என்பது தெரிந்திருக்கவில்லை. ஒன்றே ஒன்று, கண்ணே கண்ணு என ஒரேயொரு காதலியையே வைத்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், விதி வேறு ரூபத்தில் வந்து விட்டது.
அண்மையில் ஒரு காதலியுடன் ஐஸ்கிறீம் கடையில் இருந்த போது, மற்றைய காதலியின் உறவினர் ஒருவர் கண்டு விட்டார். இதை உடனே, மற்றைய காதலியின் தந்தையிடம் சொல்லியும் விட்டார்.
உடனடியாக, அவர்கள் வண்டியை கட்டிக் கொண்டு அந்த இளைஞனின் வீட்டுக்கு சென்றனர். அந்த குடும்பத்தின் யுவதியையே தான் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
எனினும், இப்படியொரு மாப்பிள்ளை தமக்கு தேவையில்லையென கூறிய யுவதியின் பெற்றொர், மகளுக்கு வேறொரு மாப்பிள்ளை தேடினர்.
யுவதிக்கோ, காதலனை மறக்க முடியவில்லை. அவரையே திருமணம் செய்ய வேண்டுமென விரும்பினார். எனினும், பெற்றோர் வேறு திருமணம் நடத்த முனைவதை ஊருக்குள பரவலாக கூறி, சம்பவத்தை பகிரங்கப்படுத்தினார். இதனால், அவரது திருமணங்கள் தடைப்பட்டுக் கொண்டிருந்தன.
இதற்கிடையில் மற்றைய காதலியும் இந்த சம்பவங்களை அறிந்தார். அவரது பெற்றோர்களிடம் விடயத்தை சொன்னதும், அவர்களும் வண்டியை கட்டிக் கொண்டு காதலனின் வீட்டிற்கு புறப்பட்டனர்.
இப்படி முக்கோண காதல் சிக்கல் ஊருக்குள் பரவியதையடுத்து, ஊர் பெரியவர்கள் எல்லாம் கூடி, கடந்த மாதம் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.
காதல் மன்னன் வரவழைக்கப்பட்டார். அங்கவையும், சங்கவையுமாக இரண்டு காதலிகளும் வரவைக்கப்பட்டனர்.
அடைந்தால் மகாதேவன், இல்லையேல் மரணதேவன் என இரண்டு யுவதிகளும் அந்த இளைஞனையே திருமணம் செய்யப் போவதாக அடம்பிடித்தனர். அதனால் அன்று பஞ்சாயத்து தீர்ப்பாகவில்லை.
அதன்பின்னர் ஒரு யுவதி விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் காப்பாற்றப்பட்டு விட்டார்.
இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் நீடித்த முக்கோண காதல் கதையின் கிளைமாக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.
அன்று, பஞ்சாயத்து மீண்டும் கூடியது.
முக்கோண காதலில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் குடும்பங்களும் பஞ்சாயத்து தீர்ப்பே இறுதியானது, அதை ஏற்றுக்கொள்வோம் என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, பஞ்சாயத்தில் ஒரு நாணயத்தை எறிந்து, பூவா தலையா போட்டுப் பார்த்தனர். இதன்படி, 20 வயதான முதலாவது காதலியே அவரது மனைவி என பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது.