ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணிநேரத்திலிருந்து 36 மணிநேரத்துக்குள் இன்னொரு தாக்குதல் நடத்தப்படலாமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் ஆப்கான் பிரிவான ISIS-K அமைப்பு கடந்த வியாழக்கிழமை விமானத்தளத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது.
அந்தத் தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 175 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்குப் பதிலடியாக ஆளில்லா வானுர்திகளைக் கொண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ISIS-K அமைப்பைச் சேர்ந்த 2 முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மற்றுமொரு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், நிலைமை மிக ஆபத்தாக உள்ளது என்றும் பைடன் எச்சரித்தார்.
வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அனைத்து அமெரிக்கப் படையினரையும் வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதுவரை 111,000க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் காபூலிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.