-சதீஸ் செல்வராஜ்-
தற்போது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களினதும் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உள்ளூர் சந்தைகளில் பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருப்பதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடுவதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கேஸ் சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதுடன், கடந்த காலங்களில் மக்கள் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக வரிசை கட்டியும் நின்றனர். இதன்போது, கொரோனா கொத்தணிகள் உருவாகும் என்பதனை கண்டுகொள்ளாத அரசாங்கம், தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக 363 ரூபாவால் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியது. இதனால், கேஸ் சிலிண்டர்கள் முதலாளிகள் மனம் மகிழ்ந்தனர். நுகர்வோர் நொந்துப்போயினர்.
மறுபுறம் பருப்பு, தேங்காய் எண்ணெய், எரிபொருள், சீனி என்று கண்ணுக்குபப்படுகின்ற தமது சகாக்களின் வியாபாரத்தைத் தூக்கிவிடுவதற்காக விலையும் அதிகரித்துக் கொடுக்கப்பட்டதுடன் (டொலருக்கான ரூபாவின் பெறுமதியின் செல்வாக்கும் காணப்படுகிறது.), உரிமைகளுக்குப் போராடிய விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் – அதிபர்கள் மற்றும் ஏனையோரை நாட்டு மக்களுக்குக் குற்றவாளிகளாகக் காண்பிப்பதற்கு அரசாங்கத்தினாலும், அரசாங்கம்சார் கருப்பு ஊடகங்களினாலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பொருளாதாரம் சரிகிறது என்று கூறுகிற அரசாங்கம், இக்காலப்பகுதிக்கான சரியான பொருளாதாரத் திட்டத்தை வகுத்து செயற்படுத்தாமல், முதலாளிகளின் பொருளாதார வளர்ச்சிக்காய் நாட்டு மக்களைப் பலிகொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. நாட்டை முடக்கவேண்டிய நேரத்தில் சுகாதாரத் தரப்பினரும், அத்துறைசார் நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் முன்வைத்த கோரிக்கைகளையும், ஆலோசணைகளையும் புறக்கணித்து திமிர் பிடித்து மண்டை சூட்டில் செயற்பட்டது. சமூகத்தில் இருந்து அழுத்தம் அதிகரிக்கவே நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்திற்கு ஒருவழியாக அரசாங்கம் வந்து சேர்ந்தது. ஆனாலும், கார்மண்டுகளிலும், கம்பனிகளிலும் தொடர்ந்து வேலைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வழமைக்கு மாறாக ‘ஓடீ” என்று கூறிகொண்டு உழைப்புச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு வழங்கிவந்த 10,000 பெறுமதியான உலர்பொதிகளையும் அரசாங்கம் இடைநிறுத்தி, குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் அதனை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்த தமது அப்பன் வீட்டு சொத்துப்போல எண்ணி இலங்கையின் வளங்களை விற்றுத் தீர்த்துக்கொண்டிருந்த ராஜபக்சாக்கள் அரசாங்கம், தற்போது நாட்டு மக்களின் முதுகில் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடாகச் சென்று கடன்வாங்கிக் கொண்டிருக்கிறது. அத்தனைக்குமான காரணம் பொருளாதார நெருக்கடி என்று கதையாடுகிறது. இவ்வாறான காரணத்தைப் பயன்படுத்தியே தமது நண்பர்களின் வியாபாரத்தை வளப்படுத்த பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது அரசாங்கம். இதில் கொள்ளை கொள்ளையாகப் பணம் பார்க்கும் பண முதலைகள் பல கொழுத்துக்கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், கொழுத்து வளரும் பண முதலைகளில் ஒன்றுதான் சீனி மாஃப்பியாக்கள்!
ஊரடங்கு அமுலில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில், அதாவது கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ஏறக்குறைய 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி வரலாற்றில் என்றுமில்லாதவகையில், 50 ரூபாவாக இருந்த சீனி இறக்குமதி வரியை ராஜபக்சாக்கள் அரசாங்கம் 25 சதமாகக் குறைத்து, அதற்கு கட்டுப்பட்டதாக இலங்கையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டது.
அச்சமயம் உலகச் சந்தையில் சீனியின் விலை மலிவாக இருந்ததால், கப்பல் நிறைத்து சீனி இலங்கைக்கு ஏற்றிவரப்பட்டது. இவ்வாறு மொத்தமாக இறக்குமதி செய்யும்போது, சீனி மாஃப்பியாக்களுக்கு உலகச் சந்தையில் குறைந்த விலைக்கு சீனியைக் கொள்வனவு செய்ய இயலும். ஷாங்கிரி லா பங்காளர் சஜாத் மவுசூனின் நிறுவனமொன்றான பிரமிட் வில்மார் (Wilmar Trading Pte.Ltd) கம்பெனியாலேயே இவ்விதமாக பாரியளவில் சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இறக்குமதி வரிச்சலுகை வழங்கப்பட்டபோதிலும், உள்ளூர் சந்தைகளில் சீனியின் விலை குறைக்கப்பட்டிருக்கவில்லை. வரிச்சலுகையின் காரணமாக சீனி இறக்குமதி செய்த முதலாளிகளுக்கு ஒரு கிலோவுக்கு 49.75 ரூபா இலாபம் கிடைத்தது. 25 சதம் வரி விதிக்கப்படுவதற்கு இணையாக அரசாங்கம் சீனியை ஓர் அத்தியாவசியப் பண்டமாகப் பிரகடனம் செய்து கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ வெள்ளை சீனிக்காக ரூபா 85 உச்ச விலையை விதித்தது. எனினும், உச்சவிலை கட்டுப்பாட்டினை அமுலாக்குவதில் அரசாங்கம் தவறிவிட்டது. 2021 பெப்ரவரி 08, சீனியை அத்தியாவசியப் பண்டங்களின் பட்டியிலில் இருந்து நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துடன் ரூபா 85 உச்சவிலை இல்லாதொழிந்தது. இது ஏற்கெனவே அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகவே கருதமுடியும். அதன் பின்னணியிலேயே தீத்தொழில் புரிபவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தம் சுருட்டி வீசப்பட்டது. இதனை கண்துடைப்பு வேலையாகவே பார்க்கமுடிகிறது.
அதாவது, சீனி இறக்குமதி உரிமத்தை அரசாங்கம் இடைநிறுத்தியதுடன், அதுவரை 8 மாதகால வரி 25 சதமாகக் காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் சீனி அவசியப்பாட்டினையும் விஞ்சி சீனி கொண்டுவரப்பட்டுவிட்டது. இறக்குமதி சங்கத்தின்படி, 600 மெட்றிக் டொன் சீனி அடுத்த வருடம் மே மாதம் வரை நுகர்வுக்குப் போதுமானது.
இவ்வாறான நிலைகைளின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பாரியளவு சீனியின் விலை அதிகரிப்பிற்குக் காரணம் டொலர் பிரச்சினை என்றும் கூறமுடியாது.



