ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 72 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் மற்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
2011 ஓகஸ்டில் அமெரிக்காவின் சினூக் ஹெலிகாப்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான ஒரு நாள் இழப்பு நேற்று வியாழக்கிழமை குண்டுவெடிப்பில் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தது 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ISIL (ISIS), கோரசன் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு ISKP (ISIS-K) ஆகியவற்றால் உரிமை கோரப்பட்டுள்ளது. அதன் தற்கொலை குண்டுதாரிகள் “அமெரிக்க இராணுவத்துடன் மொழிபெயர்ப்பாளர்களையும் ஒத்துழைப்பாளர்களையும்” கொன்றதாக அறிவித்துள்ளனர்.