சூரிய கதிர்களின் உக்கிரம் சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். தோல் தடிப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை தற்காத்து கொள்ள வீட்டிலே தயாரித்து உபயோகிக்க கூடிய எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
1. தக்காளி – ஆரஞ் பேஸ் பேக்
தக்காளி சாறு, ஓட்ஸ், பால் ஆகியவற்றை தலா இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் சிறிதளவு ஆரஞ்சு சாறு, கசகசா சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சற்று அழுத்தி பூச வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த கலவை சருமத்திற்கு பிரகாசமும், பளபளப்பும் தரும்.
2. மோர்
சூரிய ஒளியினால் சருமம் பாதிப்புக்குள்ளாவதை மோர் கட்டுப்படுத்தும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தில் மோரை தடவி வரலாம். இது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட பழுப்பு நிறத்தினை கட்டுப்படுத்தும்.
3. வேப்பிலை
பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை போட்டு சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதனை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு இலைகளை மட்டும் நன்கு அரைத்து சருமத்தில் தடவி வர வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டிய தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். வேப்பிலையில் இருக்கும் சல்பர் மூலக்கூறுகள் சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
4. சோற்று கற்றாழை
சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்தும் தன்மை சோற்று கற்றாழைக்கு உண்டு. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தடவி வந்தால் சருமம் மிருதுவாகும்.
5. பப்பாளி
பப்பாளி சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். அதில் உள்ள என்சைம்கள் இறந்த செல்களை நீக்க உதவும். பப்பாளி சாறுடன் எழுமிச்சை சாறு அல்லது தயிர் கலந்தும் உபயோகிக்கலாம். அவை வெப்ப தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட பழுப்பு நிறத்தை நீக்க உதவும். பப்பாளி, வாழை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை கூழாக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும். வாழைப்பழம் சருமத்தை வலுவாக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள அமில கார அளவை சமன் செய்ய உதவும். ஆப்பிளில் உள்ள பெக்டின் வெயிலினால் சருமத்தில் உண்டாகும் பழுப்பினை போக்கும்.
6. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் சூரிய ஒளியினால் சருமத்தில் தோன்றும் பழுப்பு நிறத்திற்கு அற்புதமான தீர்வாகும். எலுமிச்சை சாற்றை தேன் அல்லது கடலை மாவுடன் கலந்து சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7. தேங்காய் நீர்- சந்தனம் பேக்
இரண்டு தேக் கரண்டி சந்தனத்தூளை தேங்காய் நீருடன் கெட்டியாக கலந்து முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர வேண்டும். சருமம் பளபளப்பாக மாறும்.
8. வெள்ளரிகாய் – ரோஸ் வாட்டர் பேக்
வெள்ளரிகாய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியது. சிறிதளவு வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவர சருமம் பொலிவு பெறும்.
9. பால் மாஸ்க்
பொலிவற்ற சருமத்தை பளபளப்பாக்கு வதற்கு பால் மாஸ்க் உதவும். பால் மற்றும் கிளிசரினை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது சூரிய ஒளியினால் ஏற்படும் எதிர்வினைகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஒரு கப் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்தும் முகத்தில் தடவி வரலாம். இதுவும் சருமத்திற்கு பொலிவு தரும்.