கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட இன்றும் பல வீதிகள்
புனரமைக்கப்படாது மிக மோசமாக காணப்படும் நிலையில் பளை தம்பகாம் தார் வீதி
தற்போது காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுவது மிக மோசமான அபிவிருத்தி
நடவடிக்கை என பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் மாகாண வீதி மேம்பாட்டுத்
திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க
அமைச்சு உலக வங்கி மற்றும் இலங்கை அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 46,671,865.00 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு பளை தம்பகாமம் வீதி 2.5 கிலோமீற்றர் புனரமைக்கப்படுகிறது.
ஆனால் குறித்த வீதி ஏற்கனவே தார் வீதியாக புனரமைக்கப்பட்டு சேதமின்றி மிக
தரமான நிலையில் உள்ள போது அதனையே மீளவும் புனரமைக்கும் செயற்பாடு
மக்கள்மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இன்றுவரை புனரமைக்கப்படாத பல வீதிகள் காணப்படுகின்றன. இவ் வீதிகள் மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் நெருக்கடி மிக்க வீதிகளாக உள்ளன. இருந்த போது அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது தரமான தார் வீதியினை புனரமைக்க முன்மொழிந்த செயற்பாடுகள் கிளிநொச்சி அபிவிருத்தி செயற்பாடுகளின் நிலைமையினை வெளிப்படுத்துவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.