ஈழப்போரை பேசும் நிசப்த நடனம்!

Date:

ஈழத்தின் போர் சார்ந்த படைப்புக்களில் – அதன் ஆன்மாவை சிதைக்காமல் – தாங்கள் சொல்ல வந்த விடயத்தை உள் நுழைப்பது என்பது படைப்பாளிகளுக்கிருக்கின்ற மிகப்பெரிய சவால். தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி, புலம்பெயர்ந்த மண்ணிலும் சரி, தமிழ் அல்லாத பிற மொழிகளிலும் இவ்வளவு காலமும் வெளிவந்த ஈழம் சார்ந்த “சினிமாக்களில்” இதனைத் தெளிவாகக் காணலாம்.

இதில் படைப்பாளிகளை முழுமையாக குறை சொல்லிவிடவும் முடியாது. ஏனெனில், எந்தவொரு விடயத்தையும் படைப்புக்குள் கொண்டுவருகின்றபோதும், ஒரு கலைஞனுக்கு படைப்புச்சுதந்திரம் – புனைவுச்சுதந்திரம் – கைநிறையக் கிடைத்துவிடுகிறது. ஆனால், ஈழத்தின் போர் சார்ந்த படைப்பு என்று வருகின்றபோது, அதனை நேரடியாக தரிசித்த பல லட்சக்கணக்கானவர்களின் முன்னிலையில், கட்டற்ற புனைவு அல்லது நிகழ்வுகளை கலையாக்குதல் என்பது சாத்தியமற்றதாகிவிடுகிறது. தாங்கள் அனுபவித்த போரை அப்பட்டமாக விஜய் சேதுபதி நடித்தால் என்ன என்று மாத்திரமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிலிருந்து கால்புள்ளி பிசகினாலும், சோமியின் பாணியில் கூறுவதானால், “ஆர்பிஜியால் படைப்பாளியின் கவட்டுக்குள் அடித்துவிடுகிறார்கள்“. இந்த இடத்தில், ஈழத்தமிழர்களின் போரும் அதன் சார்ந்த நினைவுகளும் கலையாக திரளுதல் என்பது பொருளற்றுப்போய்விடுகிறது.

போரைப் போராகவே காட்டுவதற்கும் குழறும் சனங்களையும் குருதி சிந்தும் சிறார்களையும் காட்டுவதற்கும் ஈழம் சார்ந்த சினிமா தேவையில்லை. பழைய ஒளி வீச்சு கசற்றுக்களே போதுமானது.

அப்படியானால், நிறைவான ஈழ சினிமா ஒன்று உருவாகுவதில் இது மாத்திரம்தான் தடையா என்றால் இல்லை.

ஈழம் குறித்த பண்பாட்டு புரிதலின்மையால், மண்சார்ந்த மொழி என்பது என்ன என்ற அடிப்படை தெளிவின்மையால், நுட்பங்களை அறியாத அவசரத்தனங்களால் ஈழக்கதைகளை படமாக்கிறாம் என்ற பெயரில், மக்களின் உணர்வுகளை பலர் மீண்டும் கொத்திக் குதறியிருக்கிறார்கள். (குதறிக்கொண்டிருக்கிறார்கள்)

ஈழத்தின் போர் என்பது அவர்களது மண்ணில் இடம்பெற்றதைவிட, மக்களின் மனங்களில் இடம்பெற்றதுதான் அதிகம். அது இன்னமும் இடம்பெற்றுக்கொண்டிருப்பது. தனித்தனியாக ஒவ்வொரு முள்ளிவாய்க்காலை சுமந்து கொண்டிருப்பவர்கள் ஈழத்தவர்கள். இந்த நீட்சியை – தொடர் வலியை – புன்னகைக்கு உதடுகளின் ஆணிவேரில் சிந்துகின்ற துயரத்தை – கலையாக மாற்றுகின்ற புள்ளி ஒருவனுக்கு எத்துணை சவாலாகிறது என்பதுதான் கேள்வி. அதற்கு அசாத்தியமானதொரு திறமை வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்டதொரு சினிமா பிரதீபன் ரவீந்திரன் என்பவர் இயக்கியுள்ள நிசப்த நடனம் / SOUNDLESS DANCE.

ஈழ சினிமாக்களில் இவ்வளவு காலமும் கண்டு கண்டு வெறுத்து – சினமேற்றிய – அரியண்டமளித்த – எந்தப்போதாமைகளும் இல்லாத மிக நேர்த்தியான திரைப்படம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நான் பார்த்த மிக நிறைவான ஈழ சினிமா என்று மிகப்பொறுப்போடு இங்கு பதிவு செய்துகொள்ளமுடியும்.

முள்ளிவாய்க்கால் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன், சண்டைக்களத்தில் அகப்பட்டிருக்கும் தனது குடும்பத்தின் பிரிவினால் அலைக்கழிக்கப்படுகின்ற அகவலி சார்ந்த சிறிய கதைவரி.

எத்தனையோ கதைகளில் – கவிதைகளில் – சினிமாக்களில் பார்த்துப் புளித்த கதை. ஆனால், அதனை ஒரு சினிமாவாக எடுக்கின்றபோது, திரைக்கதையை நகர்த்துவதில் காண்பித்திருக்கின்ற நேர்த்தி, மொழியிலும் உரையாடலிலும் காணப்படும் இயல்புத்தன்மை, அரசியல் சபதங்களோ உணர்ச்சிவசப்பட்ட கூச்சல்களோ இல்லாத படிமங்கள், காட்சிகளின் வழியாகவே கதையை நகர்த்துகின்ற திரைமொழி என்று ஒன்றரை மணிநேர திரைப்படம் இதயத்தில் தனது பாரமான பாதத்தை பதித்துவிடுகிறது.

SOUNDLESS DANCE ஈழப்போரை தெரியாதவனுக்குள் கருமேகமாக நுழைந்து அடைமழையாய் பொழிகிறது. ஈழப்போரை தெரிந்தவனுக்கு அவனுக்குள் கரிய மழைவெள்ளமாகத் தேங்கிக்கிடக்கும் நினைவுகளை மீண்டும் கருமேகமாக உருவாக்கிவிடுகிறது.

சனங்களின் கதையை பேசுகிறது. பல்லாயிரக்கணக்கான போர் மாந்தர்களின் பிரதிநிதியாக, கதை தன்னைத்தானே சுமந்துகொண்டு நகர்கிறது. இறுதியில் தனது ஆன்மாவின் ஒற்றைக்கூச்சலை ஆழ் மனதில் ஒலியெழுப்பிவிட்டு போகிறது. படம் முடிந்த பிறகு அதன் அழுத்தத்தால் மனம் பாரமாகிவிடுகிறது.

பாத்திரங்கள் ஏற்படுத்துகின்ற பதற்றம், அவற்றின் நடிப்பு, காட்சிக்களங்கள், அவற்றில் போரின் சாட்சியங்களாக கொட்டிக்கிடக்கின்ற பொருட்கள் என்று இந்தப்படத்தை காட்சிக்கு காட்சி பேசிக்கொண்டே போகலாம்.

படத்தை பார்க்க இங்கு அழுத்துங்கள்

நிச்சயம் பார்க்க வேண்டிய படம். இணையத்தில் ஆறு டொலர்கள் செலுத்தி, இரண்டு நாள் வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். இயக்குனர் பிரதீபன் ரவீந்திரனுக்கும் திரைப்படக்குழுவினரும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...

ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு

மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப்...

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்