நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அரசாங்கத்தை சிரமப்படுத்தும் நோகத்துடனேயெ நாட்டை முடக்கும் கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர் கோட்டாபய அரசின் இரண்டு அமைச்சர்கள்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோரே இதனை தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அரசாங்கத்தை அவமதிப்பதை, இத்தகைய கோரிக்கைகள் நோக்கமாக கொண்டுள்ளதாக அமைச்சர் அளுத்கமகே கூறினார்.
கோவிட் -19 கட்டுப்பாட்டிற்காக முடக்கம் அறிவிக்கப்படாவிட்டால், மக்களை எதிர்ப்பு தெரிவிக்க சில குழுக்கள் ஊக்குவிப்பதாக அமைச்சர் கூறினார்.
செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த நெருக்கடியை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று சில பிரிவுகள் விரும்பவில்லை என்றும் கூறினார்.
முடக்கம் அறிவிக்கப்பட்டால், அது குறைந்தது ஒரு மாதமாவது இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதன்போது, பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிக்கையில், இத்தகைய கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் அரசாங்கத்தை சிரமப்படுத்துவதாகும் என்றார்.
அவர்களின் நோக்கம் கோவிட் -19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டதல்ல. ஆனால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.




